துபாயில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா யு19 அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் இந்த தொடரில் இந்தியா தான் அதிக முறை டிராபியை வென்றுள்ளது. இதுவரையில் நடந்த 9 தொடர்களில் இந்தியா 8 முறையும், ஆப்கானிஸ்தான் ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன. தற்போது 10ஆவது சீசனுக்கான 19வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரானது கடந்த 8ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரையில் இந்தியா யு19 அணி விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் தான் இந்தியா யு19 மற்றும் நேபாள் யு19 அணிகளுக்கு இடையிலான குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் போட்டி நடந்தது.
இதில், டாஸ் வென்ற இந்தியா யு19 முதலில் பவுலிங் செய்தது. அதன்படி நேபாள் யு19 அணி பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் நேபாள் யு19 அணியில் ஹேமந்த் தமி மட்டும் அதிகபட்சமாக 8 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வரிசையாக 1, 7, 0, 2, 4, 0, 7, 4, 2, 8, 4 என்று வரிசையாக ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக நேபாள் அணி 22.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 52 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பவுலிங் தரப்பில் இந்தியா யு19 அணியில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டுகளும், அர்ஷின் குல்கர்னி ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்தியா யு19 அணிக்கு அர்ஷின் குல்கர்னி அதிரடியாக விளையாடவே 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், அர்ஷின் குல்கர்னி 30 பந்துகளில் ஒரு பவுண்டரி 5 சிக்ஸ் உள்பட 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஆதார்ஷ் சிங் 13 ரன்கள் எடுக்க இந்தியா யு19 எளிதில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலில் பிடித்தது. இதன் மூலமாக முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.