மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த ஹாக்கி தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் தான் நேற்று இரவு நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில், இந்தியா சார்பில் நவ்னீத் கவுர், சங்கீதா குமாரி ஆகியோர் இந்திய அணி சார்பில் கோல் அடித்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள போட்டியில் மூன்று முறை சாம்பியனான தென் கொரியா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை நடக்கிறது.