ரோஹித் சர்மா அபார சதம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி

By karthikeyan VFirst Published Jan 20, 2020, 9:30 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் விராட் கோலியின் அரைசதத்தால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 287 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. 2-1 என தொடரையும் வென்றது. 
 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடி 286 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் இந்த போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. வார்னர் 3 ரன்களில் ஷமியின் பந்தில் ஆட்டமிழக்க, ஃபின்ச் 19 ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பின்னர் ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்மித் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து லபுஷேனும் அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 127 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே லபுஷேன் 54 ரன்களில் அவுட்டானார். 

அதன்பின்னர் அதிர்ச்சியளிக்கும் விதமாக களத்திற்கு வந்த மிட்செல் ஸ்டார்க், டக் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்மித் சதமடித்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த அலெக்ஸ் கேரி, குல்தீப் யாதவின் பந்தில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அஷ்டன் டர்னரை 4 ரன்களில் சைனி வெளியேற்றினார். சதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடிய ஸ்மித், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 131 ரன்கள் அடித்த ஸ்மித்தை ஷமி வீழ்த்தினார். இதையடுத்து கம்மின்ஸ் மற்றும் ஸாம்பா ஆகியோரையும் ஷமி வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. 

Also Read - ஜெயசூரியாவின் சாதனைகளை கங்கனம் கட்டி காலி செய்யும் ரோஹித்.. அடுத்த சாதனையையும் தகர்த்தெறிந்த ரோஹித்

287 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கேஎல் ராகுலும் இறங்கினர். ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடினார். ரோஹித் சர்மா பவுண்டரிகளை விளாசி கொண்டிருக்க, ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித் சர்மாவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். 

ஒருநாள் கிரிக்கெட்டின் வெற்றிகரமான மற்றும் அனுபவமான இந்த ஜோடி, வழக்கம்போலவே சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தியதோடு, வெற்றியை நோக்கி அணியை அழைத்து சென்றது. அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 29வது சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா. 119 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். ரோஹித்தும் கோலியும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 137 ரன்களை குவித்தனர். 

இதையடுத்து கோலியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், களத்தில் நிலைத்த பின்னர், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தள்ளினார். கோலி 89 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட, அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் மனீஷ் பாண்டேவும் இணைந்து போட்டியை முடித்துவைத்தனர். 48வது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என தொடரை வென்றது. 

ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவும் தொடர் நாயகனாக விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டனர். 
 

click me!