முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மகளிர் அணியானது ஒரேயொரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில், முதலில் டெஸ்ட் போட்டி நடந்தது. கடந்த 21ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கில் பூஜா வஸ்ட்ரேகர் 4 விக்கெட்டும், சினே ராணா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 406 ரன்கள் குவித்தது.
Hardik Pandya: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தயாராகும் ஹர்திக் பாண்டியா!
இதன் காரணமாக ஆஸ்திரேலியா 187 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. இதில், 261 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 73 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய மகளிர் அணிக்கு 74 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா 4 ரன்னிலும், ரிச்சா கோஷ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய மகளிர் அணி 75 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக இந்திய மகளிர் அணி டெஸ்ட் தொடரில் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலம் வாய்ந்த அணியாக மாறிய சிஎஸ்கே – ஆகாஷ் சோப்ரா பாராட்டு!