#ENGvsIND ராபின்சன் செம பவுலிங்..! மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்..! இந்திய அணியின் தோல்வி உறுதி

By karthikeyan VFirst Published Aug 28, 2021, 4:43 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் நன்றாக ஆடிவந்த புஜாரா, கோலி ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய ராபின்சன், ரிஷப் பண்ட்டையும் வீழ்த்தினார். ஆண்டர்சன் ரஹானேவை வீழ்த்த, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்து, 215 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து 239 ரன்கலுக்கு 6 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மலான், ஜோ ரூட் ஆகிய நால்வரின் அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்தது.

354 ரன்கள் பின் தங்கிய 2வது இன்னிங்ஸை 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தொடங்கியது இந்திய அணி. தொடக்க வீரர் ராகுல் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் ரோஹித் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ரோஹித்தும் புஜாராவும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 88 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 59 ரன்னில் ஆட்டமிழக்க, புஜாராவுடன் கோலி ஜோடி சேர்ந்தார்.

புஜாரா இந்த இன்னிங்ஸில் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். தனது வழக்கமான, மிகவும் மந்தமான பேட்டிங்கை ஆடாமல், சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அவருடன் இணைந்து கோலியும் கவனமாக ஆடினார். இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் 3ம் நாள் ஆட்டத்தை முடித்தனர்.

விராட் கோலி 45 ரன்களுடனும், புஜாரா 91 ரன்களுடனும் 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே ராபின்சனின் பந்தில் இன்று ஒரு ரன் கூட அடிக்காமல் 91 ரன்னில் ஆட்டமிழந்தார் புஜாரா. அரைசதம் அடித்த கோலியும் 55 ரன்னில் ராபின்சனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து ரஹானே 10 ரன்னில் ஆண்டர்சனின் பந்தில் அவுட்டாக, ரிஷப் பண்ட்டையும் ஒரு ரன்னில் அவுட்டாக்கி அனுப்பினார் ராபின்சன். இதையடுத்து இந்திய அணி 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இன்னும் 115 ரன்கள் பின் தங்கியுள்ள இந்திய அணி, இந்த போட்டியில் தோல்வியடைவது உறுதியாகிவிட்டது.
 

click me!