
கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் அணி தல்லாவாஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் தொடக்க வீரர்களான வால்டான் மற்றும் கென்னர் லூயிஸ் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 81 ரன்களை குவித்து கொடுத்தனர். லூயிஸ் 21 பந்தில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வால்டான் 29 பந்தில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் 3ம் வரிசையில் இறங்கிய ஹைதர் அலி 45 ரன்களும், கேப்டன் ரோவ்மன் பவல் 38 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். 5ம் வரிசையில் இறங்கிய அதிரடி வீரரான ஆண்ட்ரே ரசல் காட்டடி அடித்தார். சிக்ஸர் மழை பொழிந்த ரசல், வெறும் 14 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் அரைசதம் அடிக்க, ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்தது. ரசலின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 255 ரன்களை குவித்தது ஜமைக்கா அணி.
257 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிம் டேவிட் மட்டுமே சிறப்பாக ஆடி 58 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற யாருமே சரியாக ஆடாததுடன், அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால், 17.3 ஓவரில் வெறும் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஜமைக்கா அணி.