நியூசி., பவுலர்கள் அபாரம்.. 2வது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்ட இந்தியா..! நியூசி.,க்கு வெற்றி வாய்ப்பு

By karthikeyan VFirst Published Jun 23, 2021, 7:22 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, வெறும் 139 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 249 ரன்கள் அடித்தது.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் மற்றும் 4ம் நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டதுடன், ஆடிய நாட்களிலும் ஒருசில செசன்கள் பாதிக்கப்பட்டன. அதனால் ரிசர்வ் டே ஆறாம் நாளான இன்று ஆட்டம் தொடர்கிறது. 

32 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 5ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் ரிசர்வ் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். 

விராட் கோலியை 13 ரன்களில் வீழ்த்திய கைல் ஜாமிசன், தனது அடுத்த ஓவரில் புஜாராவை 15 ரன்னில் வீழ்த்தினார். அதன்பின்னர் நல்ல ஸ்டார்ட் கிடைத்த ரஹானேவும் 15 ரன்னில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். அவருடன் ஜடேஜாவும் ஜோடி சேர, பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் உணவு இடைவேளைக்கு பிறகு, ரிஷப்பும் ஜடேஜாவும் அடித்துத்தான் ஆடுவார்கள் என்று தெரிந்ததால், ஃபீல்டர்களை பவுண்டரி லைனில் நிறுத்தி வாக்னர், போல்ட், ஜாமிசன் ஆகியோர் ரன்னே விட்டுக்கொடுக்காமல் டைட்டாக பந்துவீசினர்.

ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை. சிங்கிள், டபுள்ஸ் கூட விட்டுக்கொடுக்காமல் மிகவும் சிறப்பாக பந்துவீசினர் நியூசிலாந்து பவுலர்கள். ரன்னே அடிக்க முடியாமல் திணறிய ஜடேஜா, வாக்னரின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் இறங்கி வந்து தூக்கியடிக்க, அதை நிகோல்ஸ் கேட்ச் பிடிக்க, 41 ரன்னில் நடையை கட்டினார் ரிஷப் பண்ட்.

அதைத்தொடர்ந்து, அஷ்வின்(7), முகமது ஷமி(13), பும்ரா(0) ஆகியோர் ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.  இந்திய அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், இன்னும் 55 ஓவர்கள் எஞ்சியிருக்கும் நிலையில் 139 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது நியூசிலாந்து அணி. இந்திய பவுலர்கள் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும். இப்போதைக்கு வெற்றி வாய்ப்பு நியூசிலாந்துக்கே அதிகமாக உள்ளது.
 

click me!