பவுலிங் போட்ட எல்லோரிடமும் பாரபட்சம் பார்க்காமல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா.. இந்தியா ஏ அபார வெற்றி

By karthikeyan VFirst Published Sep 6, 2019, 5:56 PM IST
Highlights

205 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி தொடக்க வீரர் மாலன் மற்றும் மூன்றாம் வரிசை வீரர் பவுமா ஆகிய இருவரது விக்கெட்டையும் விரைவிலேயே இழந்துவிட்டது. மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்ரிக்ஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தியா ஏ அணியும் தென்னாப்பிரிக்கா ஏ அணியும் ஆடிவருகின்றன. 

இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3-1 என ஏற்கனவே இந்தியா ஏ அணி தொடரை வென்றுவிட்டது. இதில் ஒரு போட்டி கூட 50 ஓவர்கள் முழுமையாக நடைபெறவில்லை. 

இந்த போட்டிகள் நடந்துவரும் திருவனந்தபுரத்தில் மழை பெய்துவருவதால் அனைத்து போட்டிகளுமே ஓவர்கள் குறைக்கப்பட்டே நடத்தப்பட்டன. கடைசி போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியும் மழையால் தாமதமாக தொடங்கப்பட்டதால் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தவானுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 135 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த தவான் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்க பவுலர்களின் பவுலிங்கை பறக்கவிட்டார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய சஞ்சு சாம்சன், 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 91 ரன்களை குவித்து 9 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக ஆடி தன் பங்கிற்கு 19 பந்துகளில் 36 ரன்களை அடித்து கொடுத்தார். சாம்சன், தவான், ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான பேட்டிங்கால் இந்தியா ஏ அணி 20 ஓவர் முடிவில் 204 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 205 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி தொடக்க வீரர் மாலன் மற்றும் மூன்றாம் வரிசை வீரர் பவுமா ஆகிய இருவரது விக்கெட்டையும் விரைவிலேயே இழந்துவிட்டது. மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்ரிக்ஸும் கைல் வெரெய்னும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். வெரெய்ன் 44 ரன்களில் ஆட்டமிழக்க, ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டிய தனது பொறுப்பை முழுமையாக செய்யாமல் 59 ரன்களில் ராகுல் சாஹரின் சுழலில் விழுந்தார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்ட, அந்த அணி 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி, 4-1 என அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை வென்றது.  

இந்திய அணி சார்பில் பந்துவீசிய அனைவருமே விக்கெட் வீழ்த்தினர். அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷான் போரெல், தேஷ்பாண்டே, ராகுல் சாஹர் மற்றும் ஷிவம் துபே ஆகிய நால்வரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட். 
 

click me!