நோ பால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. ஐசிசி-யின் அதிரடி நடவடிக்கை

By karthikeyan VFirst Published Aug 8, 2019, 12:23 PM IST
Highlights

எல்பிடபிள்யூ, நோ பால் ஆகிய விவகாரங்களில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், நோ பால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐசிசி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. 

தற்போதைய சூழலில் கிரிக்கெட்டில் அம்பயரிங் மிக மோசமாக உள்ளது. ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில்தான் மோசமாக இருக்கிறதென்றால், சர்வதேச போட்டிகளிலேயே அம்பயரிங் தரம் அடிபட்டுள்ளது.

உலக கோப்பையில் கூட ஏராளமான தவறான தீர்ப்புகள் கொடுக்கப்பட்டன. அம்பயர்களின் தவறான தீர்ப்புகளாலும் முடிவுகளாலும் முடிவே மாறிய போட்டிகள் நிறைய உள்ளன. 

எல்பிடபிள்யூ, நோ பால் ஆகிய விவகாரங்களில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், நோ பால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நோ பால் தொடர்பான முடிவுகளை மூன்றாவது அம்பயர் எடுக்கும் விதமான பரிசோதனை முயற்சியை செய்யவுள்ளது ஐசிசி. 

அடுத்த 6 மாதங்களுக்கு, குறிப்பிட்ட சில போட்டிகளில் இதுகுறித்த ஒத்திகையை பார்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. பந்துவீசிய அடுத்த சில நொடிகளில் அதன் ரிப்ளே காட்சி, டிவி அம்பயருக்கு காண்பிக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை அனைத்து ஸ்டேடியங்களிலும் செயல்படுத்த முடியுமா என்ற ஆய்வும் நடத்தப்பட்டுவருகிறது. அடுத்த சில மாதங்களுக்கு செய்யப்படும் ஒத்திகையில், ஐசிசிக்கு திருப்தி ஏற்பட்டால், இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். 
 

click me!