எப்பேர்ப்பட்ட தோனியை அசால்ட்டா தூக்கியடித்து சாதனை படைத்த ரிஷப் பண்ட்

By karthikeyan VFirst Published Aug 8, 2019, 11:43 AM IST
Highlights

ரிஷப் பண்ட் அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுப்புடனும் அதேநேரத்தில் அடித்தும் ஆடினார். ரிஷப்பிடமிருந்து இப்படியான ஒரு இன்னிங்ஸை எதிர்பார்த்திருந்த கேப்டன் கோலி, போட்டிக்கு பின்னர் அவரை பாராட்டி பேசினார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது. 

முதல் 2 டி20 போட்டிகளிலுமே வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

கடைசி டி20 போட்டியில் பவுலிங்கில் தீபக் சாஹரும் பேட்டிங்கில் ரிஷப் பண்ட்டும் அசத்தினர். ரிஷப் பண்ட்டிடமிருந்து சிறப்பானதொரு இன்னிங்ஸை எதிர்நோக்கி காத்திருந்த அணி நிர்வாகத்திற்கு, அந்த இன்னிங்ஸின் மூலம் நம்பிக்கையளித்தார் ரிஷப் பண்ட். 

இந்திய அணி 27 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ரிஷப், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். 

ரிஷப் பண்ட் அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுப்புடனும் அதேநேரத்தில் அடித்தும் ஆடினார். ரிஷப்பிடமிருந்து இப்படியான ஒரு இன்னிங்ஸை எதிர்பார்த்திருந்த கேப்டன் கோலி, போட்டிக்கு பின்னர் அவரை பாராட்டி பேசினார். இந்திய அணியின் எதிர்காலம் ரிஷப் பண்ட் தான். அதனால் அவருக்கு அதிக நெருக்கடியை கொடுக்காமல் போதுமான வாய்ப்பளிக்கப்படும் என கோலி தெரிவித்திருந்தார். 

இந்திய அணியின் தூணாக இருந்த தோனியின் இடத்தை நிரப்ப வேண்டிய கடினமான கடமை ரிஷப்புக்கு உள்ளது. தோனியின் இடத்தை அவ்வளவு எளிதாக நிரப்பமுடியாது என்பதால், எடுத்த எடுப்பிலேயே ரிஷப்பிடமிருந்து பெரிதாக எதிர்பார்த்து அவருக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது. இப்படியான சூழலில், ஜாம்பவான் தோனியை அசால்ட்டாக பின்னுக்குத்தள்ளி டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ரிஷப் பண்ட். 

டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். தோனி 98 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அவரது அதிகபட்ச டி20 ஸ்கோர் 56 ரன்கள் தான். 2017ல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தோனி இந்த ஸ்கோரை அடித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 65 ரன்களை அடித்த ரிஷப் பண்ட், தோனியை பின்னுக்குத்தள்ளி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

தோனி பொதுவாக பின்வரிசையில் தான் இறங்குவார். விரைவில் விக்கெட்டுகள் சரிந்துவிட்டால்தான் அவருக்கு சற்று முன்கூட்டியே பேட்டிங் ஆட வரும் வாய்ப்பு கிடைக்கும். தோனியால் அதிக ரன்கள் அடிக்கமுடியாததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் ரிஷப் பண்ட் நான்காம் வரிசையில் இறங்கியதால் தோனியை ஈசியாக முந்திவிட்டார். 
 

click me!