ஏமாற்றுக்காரனை துணை கேப்டனாக நியமிப்பதா..? ஆஸி., முன்னாள் கேப்டன் கடும் கண்டனம்

By karthikeyan VFirst Published Nov 27, 2021, 6:46 PM IST
Highlights

ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல்.
 

2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் தடை பெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும் நியமிக்கப்பட்டனர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்தார் டிம் பெய்ன். இந்நிலையில், அவர் சக பெண் ஊழியர் ஒருவருக்கு 2017ல் ஆபாசமாக மெசேஜ் செய்த விவகாரம் அம்பலமானதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டதாக கூறி கேப்டன்சியிலிருந்து விலகினார் டிம் பெய்ன்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக, துணை கேப்டனாக இருந்த பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்தார் பாட் கம்மின்ஸ்.  துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித்தை துணை கேப்டனாக நியமித்ததற்கு இயன் சேப்பல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இயன் சேப்பல், ஒரு கேப்டனாக ஏமாற்று வேலையில் ஈடுபட்டவர் ஸ்டீவ் ஸ்மித். ஏமாற்றியது ஏமாற்றியதுதான்; அது மாறாது. ஏமாற்றுவதில் சிறிது, பெரிது என்றெல்லாம் எதுவுமில்லை. எனவே ஸ்மித்தை துணை கேப்டனாக நியமித்தது சரியல்ல. நானும் ஒரு கேப்டனாக தவறு செய்திருக்கிறேன். ஆனால் ஏமாற்றியதில்லை என்றார் இயன் சேப்பல்.
 

click me!