மெல்பர்னை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சிறப்பம்சங்கள்

By karthikeyan VFirst Published Feb 25, 2020, 10:37 AM IST
Highlights

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்த ஸ்டேடியம் தான் திகழ்ந்துவந்தது. அதை மிஞ்சிய ஸ்டேடியமாக உருவாக்கப்பட்டுள்ள மொட்டேரா ஸ்டேடியத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. 
 

குஜராத்தில் அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக அமைக்கப்பட்டுள்ளது மொட்டேரா ஸ்டேடியம். மெல்பர்னில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம். இதுதான் இதுவரை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக இருந்தது. இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்த மொட்டேரா ஸ்டேடியத்தை இடித்துவிட்டு கட்டப்பட்ட புதிய ஸ்டேடியம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

நான்கே ஆண்டில் கட்டப்பட்ட, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா ஸ்டேடியத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்த ஸ்டேடியத்தில் முதல் நிகழ்வாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடந்தது. 

மொட்டேரா பழைய ஸ்டேடியத்தை இடித்துவிட்டு புதிய ஸ்டேடியத்தின் கட்டுமானப்பணி 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. கட்டுமானப்பணியை எல்&டி நிறுவனம் மேற்கொண்டது. நான்கே ஆண்டுகளில் மிகப்பெரிய இந்த ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் அந்த நிறுவனம் மேற்கொண்ட கட்டுமான பணிகளில் சவாலான ஒன்றாக, அந்த நிறுவனம் இந்த கட்டுமானத்தை பார்க்கிறது. 

ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையிலான இந்த ஸ்டேடியத்தில் மேலும் சில சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது, பகலிரவு போட்டிகள் நடக்கும்போது, இரவு நேரத்தில் ஸ்டேடியத்தின் நான்கு திசைகளிலிருந்தும் பரவும் மின்னொளியால், வீரர்களின் நிழல் 4 திசைகளிலும் விழும். அதை தவிர்ப்பதற்காக எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே வீரர்கள் நிழல்கள் 4 திசைகளிலும் விழாது.

அதேபோல மழைநீர் வடிகால் வசதி அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது மழை பெய்தால் மழைநீர் விரைவில் வடியும் என்பதால், மழை நின்ற பின்னர், விரைவில் மீண்டும் போட்டியை தொடர்ந்து நடத்த முடியும். 

தரமான குடிநீர் வசதி, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வசதி, 3000 கார்கள் மற்றும் 10 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்துமளவிற்கான பார்க்கிங் வசதி, மைதானத்திலேயே உள்ளரங்க பயிற்சி ஆடுகளங்கள், நவீன ஊடக அரங்கம், ஸ்டேடியத்திற்குள்ளேயே 2 சிறிய கிரிக்கெட் மைதானங்கள் மற்றும் மற்ற விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் இணைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய மொட்டேரா ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் போட்டிக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 

click me!