T20 World Cup: இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட முகமது ஷமி! ஷமியின் அருமை தெரிந்தும் கழட்டிவிட இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Sep 12, 2022, 6:35 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய மெயின் அணியில் ஷமி புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை பார்ப்போம். 
 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும்  போட்டி நிலவியதால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் ஆர்வமாக இருந்தனர். அந்தவகையில், இன்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப், தினேஷ் கார்த்திக் ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் ஆகிய மூவரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர். சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஷமிக்கு மெயின் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பொதுவாக பவுன்ஸ் நன்றாக இருக்கும். பந்தின் சீம்-ஐ(seam) பயன்படுத்தி அருமையாக வீசக்கூடிய பவுலர் ஷமி. சீனியர் பவுலரும் கூட. குறிப்பாக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கண்டிப்பாக ஜொலிக்கக்கூடிய பவுலர் தான். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

அதற்கான காரணத்தை பார்ப்போம். இந்திய அணி தேர்வு ஆடும் லெவன் காம்பினேஷனை மனதில்வைத்து  அமைந்துள்ளது. அந்தவகையில், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருடன் ஹர்ஷல் படேல் - அர்ஷ்தீப் சிங் இருவரில் ஒருவர் ஆடுவார். 

புவனேஷ்வர் குமார் பவர்ப்ளே பவுலர். நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய மற்றும் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புவனேஷ்வர் குமார் பவர்ப்ளேயில் 3 ஓவர்களை வீசுவார். புவனேஷ்வர் குமார் சிறந்த டெத் பவுலர் இல்லை என்பதால் டெத்தில் அவரை பயன்படுத்த வாய்ப்பில்லை.

பும்ராவும் ஹர்ஷல் படேலும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டுகள். எனவே கடைசி 4 ஓவர்களில் இருவரும் தலா 2 ஓவர்களை வீசுவார்கள். பவர்ப்ளே மற்றும் மிடிலில் தலா 2 ஓவர்களை வீசுவார்கள். இதுதான் இந்திய அணியின் திட்டம். 

இதையும் படிங்க - சிஎஸ்கேவின் வெற்றிதான் எங்களுக்கு உத்வேகம் அளித்தது..! ஆசிய கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா

புவனேஷ்வர் குமாரை போலவே ஷமியும் நல்ல பவர்ப்ளே பவுலர்; ஆனால் நல்ல டெத் பவுலர் கிடையாது. எனவே புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் உள்ளது. ஷமி கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் புவனேஷ்வர் குமார்  ஆசிய கோப்பை வரை சிறப்பாக ஆடியிருக்கிறார். அந்தவகையில், புவனேஷ்வர் குமாருக்கு முன்னுரிமை கொடுத்து அவர் எடுக்கப்பட்டுள்ளார். அதனால் தான் புவனேஷ்வர் குமார் மாதிரியான ஸ்விங் பவுலரான தீபக் சாஹரும் மெயின் அணியில் எடுக்கப்படாமல், ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார்.
 

click me!