ENG vs SA: 3வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Sep 12, 2022, 4:30 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.
 

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் லண்டன் கெனிங்டன்  ஓவல் மைதானத்தில் நடந்தது.

முதல் 2 நாள் ஆட்டங்கள் வெவ்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், 3ம் நாள் தான் போட்டியே தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - அன்றே எச்சரித்த வாசிம் அக்ரம்.. தோற்ற பின்னும் முட்டுக்கொடுக்கும் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க வீரர்கள், இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆலி ராபின்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடிடம் சரணடைந்தனர். ஆலி ராபின்சன் அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்த முதல் இன்னிங்ஸில் வெறும் 118 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்க அணி. அந்த அணியில் அதிகபட்சமாகவே மார்கோ யான்சென் தான் 30 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ஆலி போப் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த போப் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  தென்னாப்பிரிக்க அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மார்கோ யான்சென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

30 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 2வது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டு வெறும் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 36 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அதுகூட அடிக்காததால் 169 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவருமே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படிங்க - சிஎஸ்கேவின் வெற்றிதான் எங்களுக்கு உத்வேகம் அளித்தது..! ஆசிய கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா

2வது இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்கா 129 ரன்கள் முன்னிலை பெற, 130 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ்39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜாக் க்ராவ்லி 69 ரன்களை குவித்தார். வெறும் ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என தொடரை வென்றது.
 

click me!