IPL 2022: மழை பெய்தால் பிளே ஆஃப், ஃபைனல் என்னவாகும்..? பிசிசிஐ போட்டு வைத்துள்ள பக்கா ஸ்கெட்ச்

By karthikeyan VFirst Published May 23, 2022, 8:11 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகளின் போது மழை குறுக்கிட்டால் போட்டி எப்படி நடத்தப்படும், போட்டியின் முடிவு எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள முழு விதிகளை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், மே 24 முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்குகின்றன. மே 24ம் தேதி நடக்கும் முதல் தகுதிப்போட்டி மற்றும் மே 25ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் ஆகிய 2 போட்டிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும்.

மே 27 நடக்கும் 2வது தகுதிப்போட்டி மற்றும் மே 29ம் தேதி நடக்கும் ஃபைனல் ஆகிய 2 போட்டிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும். 

கொல்கத்தாவில் மழை பெய்துகொண்டிருப்பதால், போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மழையின் குறுக்கீடு இருக்கும்பட்சத்தில் போட்டிகள் எப்படி நடத்தப்படும், போட்டிகளின் முடிவுகள் எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள விதிகளை பார்ப்போம்.

1. ஒவ்வொரு பிளே ஆஃப் போட்டிக்கும் கூடுதலாக 120 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

2. பிளே ஆஃப் போட்டிகளின்போது மழை பெய்தா அதிகபட்சம் இரவு 9.40 வரை பார்க்கப்படும். இரவு 9.40 மணிக்கு பிளே ஆஃப் போட்டிகளை தொடங்க வாய்ப்பிருக்கும் பட்சத்தில் தொடங்கப்படும். இறுதிப்போட்டி அதிகபட்சம் இரவு 10.10க்கு தொடங்கப்படும். பிளே ஆஃப் இரவு 9.40க்கோ, ஃபைனல் இரவு 10.10க்கோ தொடங்கினால் முழு 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்படும்.

3. இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. மே 29ம் தேதி அகமதாபாத்தில் நடக்க வேண்டிய இறுதிப்போட்டி மழையால் நடக்க முடியாமல் போனால், மறுநாள் 30ம் தேதி நடத்தப்படும்.

4. பிளே ஆஃப் போட்டிகள் தேவைப்பட்டால் திட்டமிட்ட நாளில் 5 ஓவர்களாக குறைத்து நடத்தப்படும். 

5. பிளே ஆஃப் போட்டிகள் 5 ஓவர் போட்டிகளாக நடத்த கட் ஆஃப் டைம் இரவு 11.56 ஆகும். இறுதிப்போட்டி 5 ஓவர் போட்டியாக நடத்தப்பட கட் ஆஃப் டைம் 12.26 AM ஆகும்.

6. இறுதிப்போட்டி மே 29ம் தேதி தொடங்கி, ஆனால் மழையால் போட்டி முடிக்க முடியாமல் போனால், ரிசர்வ் டே-யில் நடத்தப்படும். 

7. பிளே ஆஃப் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் குறைந்தது 5 ஓவர் போட்டிகளாகக்கூட நடத்த முடியாமல் போனால், ஒரேயொரு சூப்பர் ஓவர் மட்டும் வீசி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்படும். 

8. சூப்பர் ஓவரும் வீசமுடியாமல் போனால், லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலையை பொறுத்து போட்டியின் முடிவு அறிவிக்கப்படும்.
 

click me!