
ஐபிஎல் முடிந்ததும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசிய உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் முதல் முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் விளைவாக சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ராகுல் திரிபாதி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறாதது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், சீனியர் வீரரான ஷிகர் தவான் டி20 அணியில் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்துவந்த தவான், கேஎல் ராகுலின் எழுச்சிக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 விதமான அணிகளிலும் அவர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார். தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித், கோலி ஆடாதபோதிலும், ஐபிஎல்லில் நன்றாக பேட்டிங் ஆடிய சீனியர் வீரரான தவானை எடுக்காதது ஏமாற்றம் தான்.
2016 ஐபிஎல்லில் இருந்து 2021 ஐபிஎல் வரை அனைத்து சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்த தவான், இந்த சீசனில் 14 போட்டிகளில் 460 ரன்கள் அடித்தார். அவர் ஆடிய பஞ்சாப் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதால் இந்த சீசனில் அவரால் 500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட முடியவில்லை.
இந்நிலையில், தவான் இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஏமாற்றமடைந்திருப்பார். எந்தவொரு கேப்டனும் தவான் மாதிரியான வீரரை விரும்புவார். மிகவும் ஜாலியாக இருப்பவர் தவான். அணியின் சூழலையே மகிழ்ச்சியாக வைத்திருப்பவர் அவர். உள்நாட்டு - சர்வதேச போட்டிகள், டி20 போட்டிகள் என அனைத்துவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஸ்கோர் செய்துவருபவர் தவான். தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு கம்பேக் வாய்ப்பு கொடுக்க முடியும் என்றால், கண்டிப்பாக ஷிகர் தவானுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். கடந்த 3-4 ஆண்டுகளாக இடைவிடாது தவான் ஸ்கோர் செய்துவருவதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.