ஆஸ்திரேலியாவிற்கு மரண பயத்தை காட்டிய 2 பாகிஸ்தான் வீரர்கள்

By karthikeyan VFirst Published Jun 13, 2019, 10:48 AM IST
Highlights

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
 

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

டௌண்டனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ஃபின்ச்  82 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஃபின்ச் 82 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய வார்னர் சதமடித்து அசத்தினார். வார்னரும் ஃபின்ச்சும் சிறப்பாக ஆட, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 

ஸ்மித், ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி என யாருமே சோபிக்காததால் 340-350 ரன்களை குவித்திருக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 307 ரன்கள் மட்டுமே அடித்தது. 308 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் டக் அவுட்டானார். ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் பாபர் அசாமும் இணைந்து சிறப்பாக ஆடினர். இவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், பாபர் அசாம் அவசரப்பட்டு 30 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

அரைசதம் அடித்த இமாம் உல் ஹக்கும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரர் ஹஃபீஸ் சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. 160 ரன்களுக்கு பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையடைந்தது. ஆனால் அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹசன் அலி, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஆஸ்திரேலிய அணியை தெறிக்கவிட்டார். 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்களை விளாசிய ஹசன் அலியும் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறினார். ஆனால் கொஞ்ச நேரம் ஆஸ்திரேலிய அணிக்கு ஆட்டம் காட்டிவிட்டார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த வஹாப் ரியாஸ், ஹசன் அலி விட்டுச்சென்ற பணியை செவ்வனே தொடர்ந்தார். ஸ்டார்க்கின் பவுன்ஸரை தவிர மற்றவர்களின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். அதிரடியாக ஆடிய அவர் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசினார். ஆஸ்திரேலிய அணி, வஹாப் ரியாஸெல்லாம் அடிப்பார் என்று எதிர்பார்த்திருக்காது. ஆனால் அதிரடியாக ஆடி 45 ரன்களை குவித்தார். 8வது விக்கெட்டுக்கு அவரும் சர்ஃபராஸும் இணைந்து 64 ரன்களை குவித்தனர். அதில் 45 ரன்கள் வஹாப் அடித்தது. ஆஸ்திரேலிய அணி, வஹாப்பின் அதிரடியால் மீண்டும் ஆட்டம் கண்டது. வஹாப் ரியாஸ் அதேமாதிரி அடித்தால் போட்டி கைவிட்டு போய்விடும் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டார்க் பிரேக் கொடுத்தார். வஹாப் ரியாஸை ஸ்டார்க் வீழ்த்தினார். 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதியானது. முகமது அமீரும் ஸ்டார்க்கின் அதே ஓவரில் ஆட்டமிழக்க, சர்ஃபராஸ் ரன் அவுட்டாக 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி. 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தாலும், 6 விக்கெட்டுகளுக்கு பிறகு ஹசன் அலியும் வஹாப் ரியாஸும் அடித்த அடி சரியான அடி. அவர்களின் அதிரடியான ஆட்டத்தால் கொஞ்ச நேரம் மரண பயத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. ஆனாலும் அதிக அனுபவத்தை கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எப்படி திரும்ப ஆட்டத்துக்குள் வரவேண்டும் என்பது தெரியும். அதனால் ஹசனும் வஹாப் ரியாஸும் அடிக்கும்போது பயத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினர். 
 

click me!