எங்க ஆளுங்க இந்திய ரசிகர்கள் மாதிரி கிடையாது ரொம்ப நல்லவங்க!! கிடைத்த கேப்புல கிடா வெட்டிய சர்ஃபராஸ் அகமது

By karthikeyan VFirst Published Jun 12, 2019, 4:44 PM IST
Highlights

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்த வார்னரும் ஸ்மித்தும் தடை முடிந்ததால், உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிவருகின்றனர். தடையிலிருந்து திரும்பி வந்தாலும், அவர்களை ரசிகர்கள் விடுவதாகயில்லை. 

விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த உலக கோப்பை தொடரில் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் சற்று குறைந்துள்ளது. மழை காரணமாக அடிக்கடி போட்டிகள் ரத்தாவது, வீரர்களின் காயம் ஆகிய காரணங்களினால் உலக கோப்பை விறுவிறுப்பு குறைந்துள்ளது. 

இந்திய அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்மித்தை கிண்டல் செய்த ரசிகர்களிடம், ஸ்மித்தை கிண்டல் செய்யாமல் கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று கோலி சைகை காட்டியது உலகளவில் அவரை பிடிக்காதவர்களுக்குக்கூட அவர் மீது அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்த வார்னரும் ஸ்மித்தும் தடை முடிந்ததால், உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிவருகின்றனர். தடையிலிருந்து திரும்பி வந்தாலும், அவர்களை இங்கிலாந்து ரசிகர்கள் விடுவதாகயில்லை. பால் டேம்பரிங் விஷயத்தை சுட்டிக்காட்டி தொடர்ந்து அவர்களை ரசிகர்கள் கிண்டலடித்துவருகின்றனர். பவுண்டரி லைனில் அவர்கள் இருவரும் ஃபீல்டிங் செய்யும்போது ரசிகர்கள் கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாகவே, ஸ்மித் மற்றும் வார்னரை நோகடிக்கும்படி ரசிகர்கள் கிண்டல் செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து வீரர் மொயின் அலி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் அவர்களை சீண்டிய வண்ணமே இருந்தனர். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில், இந்திய அணியின் பேட்டிங்கின்போது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் கிண்டலடித்தனர். உடனடியாக அந்த ரசிகர்கள் இருந்த ஸ்டேண்டை நோக்கி, கிண்டல் செய்யாமல் ஸ்மித்தை கை தட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று கோலி சற்று கோபமாக ரசிகர்களை நோக்கி செய்கை செய்தார். கேப்டன் கோலியின் கோரிக்கைக்கு ரசிகர்கள் செவி மடுத்தது ஒருபுறமிருக்க, கோலியின் செய்கை கோடான கோடி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. 

அந்த சம்பவம் குறித்து பேசிய விராட் கோலி, இந்திய ரசிகர்கள் ஏராளமானோர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். கிண்டலடித்து அவரை நோகடிக்கும் அளவுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு தவறு செய்து அதற்காக வருந்தி, தடையும் அனுபவித்துவிட்டு, மீண்டும் கிரிக்கெட் ஆட வந்தவரை இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று கோலி தெரிவித்திருந்தார். 

ரசிகர்கள் முதலில் கிண்டல் செய்திருந்தாலும் பின்னர் கோலியின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்தனர். இந்த சம்பவத்தை வைத்து, இந்திய ரசிகர்களைவிட பாகிஸ்தான் ரசிகர்கள் டீசெண்ட் என்பதை நிறுவ முனைந்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது. 

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவிடம், ஸ்மித், வார்னரை பாகிஸ்தான் ரசிகர்கள் டார்கெட் செய்து கிண்டலடிப்பார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த  சர்ஃபராஸ் அகமது, பாகிஸ்தான் ரசிகர்கள் ஸ்மித் மற்றும் வார்னரை கிண்டலடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. பாகிஸ்தான் ரசிகர்கள் கிரிக்கெட் மீதும் வீரர்கள் மீதும் அதிகமான காதல் கொண்டவர்கள். அவர்களை ஆதரிப்பார்களே தவிர கிண்டலடிக்க மாட்டார்கள் என்றார். 
 

click me!