ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.. கேகேஆருக்கு மரண பயத்தை காட்டிய ஹர்திக் பாண்டியா

By karthikeyan VFirst Published Apr 29, 2019, 11:59 AM IST
Highlights

கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆடியது, ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. 
 

கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆடியது, ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. 

கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் கில் மற்றும் லின் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கே 96 ரன்களை குவித்தனர். 

இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெத் ஓவர்களில் வழக்கம்போல பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்டு 40 பந்துகளில் 80 ரன்களை குவித்தார் ஆண்ட்ரே ரசல். ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஃபினிஷிங்கால் 232 ரன்களை குவித்தது கேகேஆர் அணி. 

233 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக், எவின் லூயிஸ் ஆகியோர் சொதப்பினர். அதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அடித்து ஆடினார். ஆனாலும் அவரும் 26 ரன்களில் நடையை கட்டினார். பொல்லார்டும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முக்கியமான விக்கெட்டுகள் அனைத்தும் விழுந்தாலும் அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக விளாசினார் ஹர்திக் பாண்டியா. 9வது ஓவரிலேயே களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா, மிகவும் இக்கட்டான நிலையிலிருந்து அணியை மீட்டெடுத்து வெற்றி நம்பிக்கையை ஊட்டினார். 10வது ஓவரிலிருந்தே சிக்ஸர் மழை பொழிய தொடங்கிவிட்டார். 10 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன்பின்னர் ஒவ்வொரு ஓவரையும் அடித்து ஆடினார் ஹர்திக் பாண்டியா. 

சுனில் நரைனின் 11வது ஓவரில் ஒரு சிக்ஸர், சாவ்லா வீசிய 12வது ஓவரில் 2 சிக்ஸர்கள், கர்னி வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி, சுனில் நரைனின் 14வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி, சாவ்லா வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள், நரைன் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி, 18வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என ஓவருக்கு ஓவர் அடித்து நொறுக்கினார் ஹர்திக் பாண்டியா. 

முதல் 10 ஓவர்களில் வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த மும்பை அணிக்கு, அடுத்த 10 ஓவர்களில் 155 ரன்கள் தேவைப்பட்டது. சாத்தியமில்லாத இந்த இலக்கை சாத்தியப்படுத்த முனைந்த ஹர்திக் பாண்டியா, வெற்றிக்கு அருகில் மும்பை அணியை அழைத்து சென்றார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொல்லார்டு மாதிரியான பவர் ஹிட்டர் கூட இருந்திருந்தால் வெற்றி மும்பை வசப்பட்டிருக்கும். 

அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா, 17 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சீசனில் விரைவில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் வெறும் 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து 18வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார் பாண்டியா. அதன்பின்னர் எஞ்சிய 2 ஓவர்களில் அந்த அணி வெறும் 13 ரன்களை மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஹர்திக் பாண்டியாவின் இன்னிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. மும்பை அணி வெற்றி பெறவில்லை என்றாலும், கேகேஆர் அணிக்கு மரண பயத்தை காட்டியதோடு, ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் பாண்டியா.
 

click me!