ஆர்சிபியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி.. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டெல்லி கேபிடள்ஸ்

By karthikeyan VFirst Published Apr 28, 2019, 7:56 PM IST
Highlights

ஆர்சிபி அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது டெல்லி கேபிடள்ஸ்.

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் டெல்லி அணியும் ஆர்சிபி அணியும் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். ஆனால் பிரித்வி ஷா பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 18 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அதன்பின்னர் தவானும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய தவான், அரைசதம் அடித்து சரியாக 50 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் கடந்தார். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. 52 ரன்களில் ஐயரும் அவுட்டாக, இதற்கிடையே ரிஷப் பண்ட்டும் 7 ரன்களில் அவுட்டாக, 16,17,18 ஆகிய ஓவர்களில் டெல்லி அணியின் ரன்ரேட் குறைந்தது.

ஆனால் கடைசி 2 ஓவர்களில் ரூதர்ஃபோர்டும் அக்ஸர் படேலும் இணைந்து ரன்னை உயர்த்தினர். உமேஷ் வீசிய 19வது ஓவரில் அக்ஸர் படேல் 2 பவுண்டரியும் ரூதர்ஃபோர்டு ஒரு சிக்ஸரும் அடித்தனர். சைனி வீசிய கடைசி ஓவரில்  ரூதர் ஃபோர்டு 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். அக்ஸர் படேலும் ஒரு பவுண்டரி அடித்தார். ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். அக்ஸர் படேல் 9 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். கடைசி நேர ரூதர்ஃபோர்டு - படேல் ஜோடியின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் பார்த்திவ் படேல் அதிரடியாக தொடங்கினார். 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து பார்த்திவ் அவுட்டாக, பின்னர் கோலி 23 ரன்களிலும் டிவில்லியர்ஸ் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் கிளாசன் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 24 ரன்களில் அவுட்டானார். ஆர்சிபி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸும் குர்கீரத் சிங்கும் ஓரளவிற்கு ஆடினர். எனினும் அவர்களால் இலக்கை எட்டமுடியவில்லை. கடைசி 2 ஓவர்களில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி ஓவரை வீசிய ரபாடா 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து 16 புள்ளிகளை பெற்றுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 

click me!