ஹர்திக் பாண்டியா தவறுதலாக டிவி அம்பயர் அவுட் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா இதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டில் கள நடுவர்கள் சந்தேகம் காரணமாக தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறும்போது, ரீப்ளே செய்து பார்த்து தெளிவான மற்றும் சரியான முடிவெடுப்பதற்காகவே தேர்டு அம்பயர் உள்ளார். முடிந்தவரை தவறுகள் கலையப்பட வேண்டும் என்பதற்காகவே டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதே டெக்னாலஜியே சில சமயங்களில் கவிழ்த்துவிடுகிறது. தேர்டு அம்பயர்களும் ரீப்ளே செய்து பார்த்தாலும் சில நேரங்களில் தவறான முடிவுக்கு வருகின்றனர்.
அப்படியொரு சர்ச்சை சம்பவம் தான், இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லின் அபாரமான இரட்டை சதத்தால் இந்திய அணி 50 ஓவரில் 349 ரன்களை குவித்தது. கில் 208 ரன்களை குவித்தார். 350 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியை 337 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 12 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு தவறுதலாக அவுட் கொடுக்கப்பட்டது. 175 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில், இன்னிங்ஸின் 29வது ஓவரில் பேட்டிங் ஆட களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 5வது விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்க்க உதவினார். 28 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா இன்னிங்ஸின் 40வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
டேரைல் மிட்செல் வீசிய அந்த ஓவரின் 4வது பந்தில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டை ஒட்டியபடி பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. அவர் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. அதனால் நியூசிலாந்து அணி ரிவியூ செய்தது. அதை ரிவியூ செய்த தேர்டு அம்பயர் அவுட் கொடுத்தார். பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் படவில்லை. எனவே விக்கெட் கீப்பிங் கேட்ச்சில் அவுட் கொடுக்க முடியாது. நியூசி., விக்கெட் கீப்பர் டாம் லேதம் ஸ்டம்பிங் செய்தபோது ஹர்திக் பாண்டியா க்ரீஸில் தான் இருந்தார். எனவே ஸ்டம்பிங்கும் கிடையாது. பந்தை டாம் லேதம் பிடித்தபின், அவரது க்ளௌஸ் தான் ஸ்டம்ப்பில் பட்டது. பந்து நேரடியாக ஸ்டம்ப்பில் படவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியாவிற்கு போல்டு முறையில் அவுட் கொடுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் ஆர்சிபி வீரர் நியமனம்..!
இதுதொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா, பந்து பேட்டிலும் படவில்லை; ஸ்டம்ப்பிலும் படவில்லை. பிறகு எப்படி இது அவுட்..? என்று பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.