ஹர்திக் பாண்டியாவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்..! கேப்டன் தேர்வு உட்பட 2 அதிர்ச்சிகள்

By karthikeyan VFirst Published Jun 3, 2020, 2:01 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியா தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டதால், கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஊரடங்கு காலத்தில், கிரிக்கெட் வீரர்கள் தங்களது சக வீரர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுகின்றனர். முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது ஆல்டைம் உலக லெவன், ஆல்டைம் ஐபிஎல் லெவன் ஆகிய அணிகளை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில், இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரும் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான ஹர்திக் பாண்டியா, தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 

தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் மற்றும் இந்தியாவின் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் கெய்ல் முக்கியமானவர். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர்(175), ஐபிஎல்லில் அதிகமான சிக்ஸர்கள்(326 சிக்ஸர்) ஆகிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் கெய்ல். எனவே கெய்லை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள ஹர்திக் பாண்டியா, அவரது பார்ட்னராக ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். 

ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் ரோஹித் சர்மா. மிகச்சிறந்த தொடக்க வீரர் மட்டுமல்லாது, ரோஹித் வெற்றிகரமான கேப்டனும் கூட. மும்பை இந்தியன்ஸுக்கு நான்கு முறை கோப்பையை வென்றுகொடுத்த தனது கேப்டனான ரோஹித் சர்மாவை, ஹர்திக் பாண்டியா தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். 

மூன்றாம் வரிசையில் விராட் கோலியை தாண்டி வேறு வீரரை யாருமே யோசிக்கமாட்டார்கள். ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்துள்ள விராட் கோலியைத்தான் மூன்றாம் வரிசை வீரராக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்துள்ளார். 

நான்காம் வரிசைக்கு டிவில்லியர்ஸையும் ஐந்தாம் வரிசை வீரராக சுரேஷ் ரெய்னாவையும் தேர்வு செய்துள்ள ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல்லில், தான் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், நான்கு முறை அந்த அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்தவருமான ரோஹித் சர்மாவை ஹர்திக் பாண்டியா கேப்டனாக தேர்வு செய்யவில்லை. மாறாக சிஎஸ்கே கேப்டன் தோனியைத்தான் அவர் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 

தனது ஆல்டைம் லெவனில் தனது பெயரையும் சேர்த்துள்ளார் ஹர்திக் பாண்டியா. பொதுவாக ஒரு வீரர், ஆல்டைம் லெவனை தேர்வு செய்தால் தங்களது பெயரை அந்த அணியில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா தனது பெயரையும் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனில் தேர்வு செய்துள்ளார். 

ஐபிஎல்லில் தனது கேப்டன் ரோஹித்தை, ஆல்டைம் லெவனின் கேப்டனாக தேர்வு செய்யாமல் அதிர்ச்சியளித்த ஹர்திக் பாண்டியா, தனது பெயரையும் அந்த லெவனில் சேர்த்துக்கொண்டு கூடுதல் அதிர்ச்சியளித்துள்ளார். 

ஸ்பின்னர்களாக வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் ஆகிய இருவரையும் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா, ஃபாஸ்ட் பவுலர்களாக தனது சக வீரர்களான பும்ரா மற்றும் மலிங்காவை தேர்வு செய்துள்ளார். 

ஹர்திக் பாண்டியாவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சுனில் நரைன், ரஷீத் கான், பும்ரா, மலிங்கா.
 

click me!