இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று இந்திய அணி ஆடவுள்ள நிலையில், இலங்கை அணியை ஸ்லெட்ஜிங் செய்யமாட்டோம்; உடல்மொழியிலேயே மிரட்டிவிடுவோம் என்று இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடக்கும் நிலையில், முதல் டி20 போட்டி இன்று மும்பை வான்கடேவில் நடக்கிறது.
டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. எனவே ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட அணி தான் டி20 தொடரில் ஆடுகிறது.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், வலுவான அணியை கட்டமைத்து ஆக்ரோஷமான ஆட்ட அணுகுமுறையுடன் 2024 டி20 உலக கோப்பைக்கு இப்போதே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி. அந்தவகையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் அணி கட்டமைக்கப்பட்டுவருகிறது.
இலங்கைக்கு எதிராக இன்று நடக்கும் முதல் டி20 போட்டி தான், 2023ம் ஆண்டில் இந்தியாவில் முதல் போட்டி. எனவே இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியா..? இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை
டி20 தொடரில் இலங்கையை எதிர்கொள்வது குறித்தும், இந்த தொடரில் இந்திய அணியின் அணுகுமுறை குறித்தும் பேசிய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஆசிய கோப்பையில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் எண்ணமெல்லாம் இல்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட நினைக்கிறோம். அவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதை உணரவைப்போம். நல்ல கிரிக்கெட் ஆடவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இலங்கை வீரர்களை ஸ்லெட்ஜிங் எல்லாம் செய்யமாட்டோம். எங்களது உடல்மொழியிலேயே அவர்களை மிரட்டிவிடுவோம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.