சர்வதேச கிரிக்கெட்டில் முதல் & ஒரே இந்திய வீரர்..! ஹர்திக் பாண்டியா வரலாற்று சாதனை.. ஷேன் வாட்சனுடன் இணைந்தார்

By karthikeyan VFirst Published Jul 18, 2022, 4:38 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக அபார சாதனையை படைத்து, ஷேன் வாட்சனுடன் இணைந்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
 

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக கடந்த 2-3 ஆண்டுகளாகவே சரியாக விளையாட முடியாமல் தவித்துவந்ததுடன், இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தையும் இழந்தார்.

இதையடுத்து ஹர்திக் பாண்டியா இழந்த ஃபிட்னெஸை மீண்டும் பெற அவருக்கு இந்திய அணி நிர்வாகம் ஓய்வளித்து போதிய கால அவகாசம் கொடுத்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி பெற்று முழு ஃபிட்னெஸுடன் ஐபிஎல்லுக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா, ஒரு கேப்டனாகவும் ஆல்ரவுண்டராகவும் மிகச்சிறப்பாக செயல்பட்டு, குஜராத் டைட்டன்ஸுக்கு அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்தார்.

ஐபிஎல்லில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றுடன் சேர்த்து கேப்டன்சியிலும் அசத்தியதன் விளைவாக இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடித்தார் ஹர்திக் பாண்டியா. இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களிலும் அபாரமாக விளையாடி, இந்திய அணி இந்த 2 தொடர்களையும் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல வெற்றி பெற்றே தீர வேண்டிய கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தினார் ஹர்திக் பாண்டியா. 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலிங்கில் அசத்திய ஹர்திக் பாண்டியா, 260 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டும்போது ரிஷப் பண்ட்டுடன் இணைந்து 133 ரன்கள் என்ற முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து பேட்டிங்கிலும் அசத்தினார். 71 ரன்களை குவித்து ரிஷப் பண்ட்டுடன் பாண்டியா அமைத்த பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம்.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் பவுலிங்கில் 4 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் அரைசதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்தார். இதற்கு முன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய 4 இந்திய வீரர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர். சர்வதேச அளவில் 56 வீரர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும், இதே சம்பவத்தை செய்தார் ஹர்திக் பாண்டியா. அந்த டி20 போட்டியில் 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய பாண்டியா, பேட்டிங்கில் அரைசதம் அடித்தார். இதன்மூலம், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டிலும், பவுலிங்கில் 4 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் அரைசதம் அடித்த முதல் மற்றும் ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்த 2வது வீரர் பாண்டியா ஆவார்.

இதையும் படிங்க - விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை தகர்த்தார் பாபர் அசாம்

இதற்கு முன் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 4 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்துள்ளார்.
 

click me!