லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்து, 136 ரன்கள் என்ற எளிய இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசனில் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன.
லக்னோவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஃபாஸ்ட் பவுலர் அல்ஸாரி ஜோசஃபிற்கு பதிலாக ஆஃப்கான் சைனாமேன் பவுலரான நூர் அகமது சேர்க்கப்பட்டார். லக்னோ அணியில் சீனியர் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா சேர்க்கப்பட்டார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோஹித் சர்மா.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, 3ம் வரிசையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்தனர். ரிதிமான் சஹா 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, அதன்பின்னர் இறங்கிய அபினவ் மனோகர் 2 ரன்னுக்கும், விஜய் சங்கர் 10 ரன்னுக்கும், டேவிட் மில்லர் 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 50 பந்தில் 66 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் இன்னிங்ஸின் கடைசி பந்தில் தான் ஆட்டமிழந்தார். ஆனால் அவர் எதிர்கொண்ட 12 பந்தில் அவரால் 8 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.
பாண்டியா, சஹாவை தவிர வேறு யாரும் சரியாக ஆடாததால் அந்த அணியால் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 136 ரன்கள் என்ற இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி விரட்டிவருகிறது.