இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா..? கேப்டன்சி ரேஸில் ராகுல், பண்ட்டை முந்தினார் பாண்டியா

By karthikeyan VFirst Published May 30, 2022, 8:29 AM IST
Highlights

இந்திய அணியின் அடுத்த கேப்டன்சிக்கான ரேஸில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டை முந்தினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் அவரது அபாரமான கேப்டன்சியை பார்த்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், பாண்டியாவையே அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் முதல் முறையாக அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே அபாரமாக விளையாடி கோப்பையை வென்றது. அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, அதே சாதனையை படைத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் தவித்து, இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்த ஹர்திக் பாண்டியா மீது இந்த ஐபிஎல் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஈடுகட்டும் விதமாக பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.

பேட்டிங், பவுலிங்கில் பாண்டியா அசத்தியது பெரிய விஷயமல்ல. ஆனால் கேப்டன்சி அனுபவமே இல்லாத பாண்டியா, இந்த சீசனில் முதிர்ச்சியுடனும் பக்குவத்துடனும் தெளிவான கேப்டன்சி செய்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ஆக்ரோஷமான குணாதிசயத்தை கொண்ட ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட நிலையில், அவரது உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தவில்லை. அமைதியாக, நிதானமாகவே செயல்பட்டார்.

இந்த சீசனில் பேட்டிங்கில் 3-4ம் வரிசைகளில் பொறுப்புடன் பேட்டிங் ஆடிய பாண்டியா, தனது பவுலிங்கின் தேவை அணிக்கு இருக்கிறது என்று அவர் கருதியபோது மட்டுமே பவுலிங் செய்தார். மிகச்சிறப்பாக பந்துவீசினார்.  ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் அசத்தினார்.

களவியூகம், வீரர்களை கையாண்ட விதம், ஃபீல்டிங் செட்டப், கேரக்டர் என அனைத்திலுமே ஒரு தேர்ந்த கேப்டனாக தெரிந்தார். 

ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனுக்கான ரேஸில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருக்கும் நிலையில், அவர்களை ஓவர்டேக் செய்து ஹர்திக் பாண்டியா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை கண்டு வியந்த சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார்.
 

click me!