GT vs RR: உன்னாலதான்டா நான் அவுட்டானேன்.. ஷுப்மன் கில் மீது செம கடுப்பான ஹர்திக் பாண்டியா..!

By karthikeyan VFirst Published May 30, 2022, 7:51 AM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் ஃபைனலில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் மீது செம கடுப்பாகி களத்தைவிட்டு வெளியேறினார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் முதல் முறையாக அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே அபாரமாக விளையாடி கோப்பையை வென்றது. அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, அதே சாதனையை படைத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் தவித்து, இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்த ஹர்திக் பாண்டியா மீது இந்த ஐபிஎல் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஈடுகட்டும் விதமாக பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.

பேட்டிங், பவுலிங்கில் பாண்டியா அசத்தியது பெரிய விஷயமல்ல. ஆனால் கேப்டன்சி அனுபவமே இல்லாத பாண்டியா, இந்த சீசனில் முதிர்ச்சியுடனும் பக்குவத்துடனும் தெளிவான கேப்டன்சி செய்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ஆக்ரோஷமான குணாதிசயத்தை கொண்ட ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட நிலையில், அவரது உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தவில்லை. அமைதியாக, நிதானமாகவே செயல்பட்டார்.

ஆனால் ஃபைனலில் ஷுப்மன் கில் மீது செம கடுப்பானார். 131 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி 23 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், இலக்கு எளிதானது என்பதால் விக்கெட்டை இழக்காமல் ஆட்டத்தை முடிந்தவரை எடுத்துச்சென்றாலே வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உணர்ந்து கில்லும் பாண்டியாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.

3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 63 ரன்களை சேர்த்தனர். அதன்பின்னர் மில்லரும் கில்லும் இணைந்து எளிதாக போட்டியை முடித்தனர். பொறுப்புடன் ஆடிய பாண்டியா 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாஹல் வீசிய 14வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். 14வது ஓவரின் முதல் பந்தை ஃபைன் லெக் திசையில் அடித்த பாண்டியா, 2 ரன்களை ஓடி முடித்துவிட்டு 3வது ரன்னுக்கு அழைத்தார். 3வது ரன் ஓடியிருக்க வேண்டிய அதற்கு, வேண்டாம் என்று மறுத்தார் கில். 3வது ரன் ஓடியிருக்கலாம் என்பதால் கில்லின் செயலால் அதிருப்தியில் இருந்த பாண்டியா அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

3வது ரன் ஓடியிருந்தால் ஸ்டிரைக் தன்னிடம் இருந்திருக்காது; அவுட்டும் ஆகியிருக்க தேவையில்லை என்ற எண்ணத்தில், தனது விக்கெட்டுக்கு கில்லும் ஒரு காரணம் என்கிற ரீதியில் ஷுப்மன் கில் மீது செம கடுப்பானார் பாண்டியா. குஜராத் அணியின் டக் அவுட்டுக்கு சென்றபின்னர், மற்றவர்களிடமும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
 

click me!