
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே ஐபிஎல் டைட்டிலை வென்றது.
ஐபிஎல் கோப்பையை வென்ற 4வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதற்கு முன், தோனி, ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய மூவர் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள் ஆவர். அந்த வரிசையில் இப்போது பாண்டியாவும் இணைந்துள்ளார்.
மேலும் இது ஹர்திக் பாண்டியாவிற்கு 5வது ஐபிஎல் கோப்பை ஆகும். 2015, 2017, 2019, 2020 ஆகிய 4 சீசன்களில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த பாண்டியா, கேப்டனாக குஜராத்டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்றுள்ளார்.
எனவே மொத்தமாக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. 2015ம் ஆண்டில் தான் ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா அறிமுகமே ஆனார். அதிலிருந்து நடந்த 8 சீசன்களில் 5 முறை கோப்பையை வென்ற அணியில் பாண்டியா இருந்திருக்கிறார்.
இதன்மூலம் அதிக முறை கோப்பையை வென்ற வீரர்கள் பட்டியலில் தோனியை(4 முறை) முந்தியுள்ளார் ஹர்திக் பாண்டியா. ரோஹித் சர்மா 6 முறை கோப்பையை வென்றிருக்கிறார். மும்பை இந்தியன்ஸுக்காக 5 முறையும், டெக்கான் சார்ஜர்ஸுக்காக ஒருமுறையும் என மொத்தம் 6 முறை கோப்பையை வென்ற ரோஹித் முதலிடத்தில் உள்ளார்.
பொல்லார்டு, ராயுடு ஆகிய இருவரும் 5 முறை கோப்பையை வென்றுள்ளனர். அவர்களுடன் இப்போது பாண்டியாவும் சேர்ந்துள்ளார்.