
இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங். 1998ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கங்குலி, தோனி தலைமையிலான இந்திய அணியில் முக்கிய ஸ்பின்னராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், இந்திய அணிக்காக பல அருமையான ஸ்பெல்களை வீசி அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்தவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கடைசியாக கேகேஆர் ஆகிய அணிகளுக்காக ஆடியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், சமகாலத்தில் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தான் என்றும், பிடித்த பவுலர் பும்ரா என்றும் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரராக இந்திய அணியிலிருந்து ரோஹித்துக்கு மேலாக கோலி தான் மதிப்பிடப்படுகிறார். ஆனால் ரோஹித் சர்மா வேற லெவல் பிளேயர். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என அசாத்திய சாதனைகளை அசால்ட்டாக படைத்து வைத்திருப்பவர் ரோஹித் சர்மா. அந்தவகையில், ரோஹித் தான் தனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் மற்றும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். பவுலர்களில் பும்ரா தான் தனது ஃபேவரட் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா. டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் அவரது பேட்டிங் அபாரமாக இருக்கும். அவர் பேட்டிங் ஆடுவதை பார்க்கும்போது பேட்டிங் மிக மிக எளிதாக தெரியும். சர்வதேச கிரிக்கெட்டில் பெஸ்ட் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தான். விராட் கோலி, ராகுல் ஆகியோரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் தான். ஆனால் ரோஹித் வேற லெவல். ரோஹித் தான் எனது ஃபேவரட் பேட்ஸ்மேன்.
பவுலர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் எனது ஃபேவரட். பும்ராவும் அப்படித்தான்.. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான ஃபார்மட்டிலும் டாப் கிளாஸ் பவுலர். ரோஹித் மற்றும் பும்ரா தான் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர்கள் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.