PBKS vs GT: கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர் அடித்த டெவாட்டியா.. சதத்தை தவறவிட்ட கில்! கடைசி பந்தில் GT த்ரில் வெற்றி

Published : Apr 09, 2022, 08:12 AM IST
PBKS vs GT: கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர் அடித்த டெவாட்டியா.. சதத்தை தவறவிட்ட கில்! கடைசி பந்தில் GT த்ரில் வெற்றி

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 190 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்தது. இந்தபோட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக பேட்டிங் ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்தார். 27 பந்தில் 64 ரன்கள் அடித்தார் லிவிங்ஸ்டோன். ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 23 ரன்களும், ராகுல் சாஹர் 14 பந்தில் 22 ரன்கலும் அடித்தனர். இதையடுத்து 20 ஓவரில் 189 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

190 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய சாய் சுதர்சன் அடித்து ஆடி 30 பந்தில் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அறிமுக போட்டியிலேயே தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அபாரமாக பேட்டிங் ஆடினார். 

தொடக்கம் முதலே அபாரமாக அடித்து ஆடிய ஷுப்மன் கில் அரைசதம் அடித்தார். அதன்பின்னர் சதத்தை நோக்கி ஆடிய ஷுப்மன் கில் 96 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 பந்தில் 27 ரன்கள் அடித்திருந்த நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அவுட்டானார். 

கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை வைடாக வீசினார் ஒடீன் ஸ்மித். மீண்டும் வீசிய முதல் பந்தை டேவிட் மில்லர் அடிக்காமல் விட்டதால், அந்த பந்தை வீணடிக்காமல் ஒரு ரன் ஓடினார். ஆனால் ஹர்திக் பாண்டியாவால் பேட்டிங் க்ரீஸுக்கு வரமுடியவில்லை. பஞ்சாப் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து பாண்டியாவை ரன் அவுட் செய்தார்.

இதையடுத்து கடைசி 5 பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் டெவாட்டியா களத்திற்கு வந்தார். 2வது பந்தில் ராகுல் டெவாட்டியா ஒரு ரன் அடிக்க, 3வது பந்தில் பவுண்டரி அடித்த மில்லர், 4வது பந்தில் சிங்கிள் மட்டுமே எடுக்க, கடைசி 2 பந்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5வது பந்தை சிக்ஸர் அடித்த ராகுல் டெவாட்டியா, கடைசி பந்தை ஒடீன் ஸ்மித் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே தான் வீசுவார் என்று அறிந்து முன்கூட்டியே ஆஃப் திசையில் நகர்ந்துவந்து கடைசி பந்தையும் சிக்ஸர் அடித்தார். கடைசி 2 பந்தையும் சிக்ஸர் அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார் டெவாட்டியா.

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?