கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும்..? டுப்ளெசிஸையும் தென்னாப்பிரிக்க அணியையும் கிழித்தெடுத்த முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Oct 19, 2019, 4:52 PM IST
Highlights

தொடர்ச்சியாக டாஸ் தோற்ற, விரக்தியில் இருந்த டுப்ளெசிஸ், டெம்பா பவுமாவை டாஸ் கேட்பதற்காக அழைத்துவந்திருந்தார். ஆனால் டுப்ளெசிஸின் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த முறையும் தென்னாப்பிரிக்க அணி டாஸ் தோற்றது. 
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் அடித்துள்ளது. முதல் 3 விக்கெட்டுகளை 39 ரன்களுக்கே இழந்துவிட்ட இந்திய அணியை ரோஹித் சர்மாவும் ரஹானேவும் இணைந்து அபாரமாக ஆடி சரிவிலிருந்து மீட்டனர்.

முதல் நாள் ஆட்டமான இன்று, டி பிரேக் முடிந்து வீரர்கள் களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. 58 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில், 32 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், ஆட்டம் முடிந்தது. இது இந்திய அணிக்குத்தான் பாதிப்பு. 

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் டாஸ் கேட்கவில்லை. தொடர்ச்சியாக டாஸ் தோற்ற, விரக்தியில் இருந்த டுப்ளெசிஸ், டெம்பா பவுமாவை டாஸ் கேட்பதற்காக அழைத்துவந்திருந்தார். ஆனால் டுப்ளெசிஸின் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த முறையும் தென்னாப்பிரிக்க அணி டாஸ் தோற்றது. 

டுப்ளெசிஸின் இந்த செயலையும், இவ்வளவு மோசமான மனநிலையையும் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த தொடரில் வர்ணனை செய்துவரும் ஸ்மித், டுப்ளெசிஸின் செயலைக்கண்டு அதிருப்தியடைந்தார். 

அதுகுறித்து பேசிய ஸ்மித், இது மிகவும் நகைச்சுவையான விஷயம் மட்டுமல்லாது பரிதாபகரமானதும் கூட. டுப்ளெசிஸின் இந்த செயல் தென்னாப்பிரிக்க அணியின் மோசமான மனநிலையைத்தான் காட்டுகிறது. அதை நான் ரசிக்கவில்லை. இந்தியாவில் டாஸ் வென்றால் நல்லதுதான். ஆனால் டாஸ் மட்டுமே போட்டியை வென்று கொடுக்காது. நன்றாக ஆடினால்தான் ஜெயிக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக தென்னாப்பிரிக்க அணி முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. டாஸ் ஜெயிக்கவில்லை என்றாலும், சிறப்பாக ஆடினால் இந்திய அணியை ஜெயிக்க முடியும் என்று ஸ்மித் காட்டமாக பேசியுள்ளார். 

முதலிரண்டு போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோரை அடித்துவிட்டது. அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் அதேநேரத்தில் ஸ்மித் சொன்னதுபோல, தென்னாப்பிரிக்க அணி நன்றாக ஆடியிருந்தால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். 
 

click me!