சேவாக்கே செய்யாத செம சாதனையை அசால்ட்டா செய்து காட்டிய ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Oct 19, 2019, 3:34 PM IST
Highlights

டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக இறக்கப்பட்ட பின்னர் சதமாக விளாசி சாதனைகளை படைத்துவருகிறார். 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 39 ரன்களுக்கே முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. மயன்க் அகர்வால் 10 ரன்களிலும் புஜாரா  ரன்னே எடுக்காமலும் கேப்டன் கோலி 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தங்களது தோள்களில் சுமந்த ரோஹித் சர்மாவும் ரஹானேவும் அபாரமாக ஆடிவருகின்றனர். 

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் சதமடித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடித்த இந்திய தொடக்க வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். ரோஹித் சர்மா இந்த தொடரில் இதுவரை 3 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் ஒரு இன்னிங்ஸ் எஞ்சியுள்ளது. 

கவாஸ்கர் 1970-71ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் தொடரிலும், 1978-79ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் தலா 4 சதங்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான ஒரு தொடரில் 3 சதங்களை அடித்துள்ளார். இந்நிலையில், இந்த தொடரில் இதுவரை 3 சதங்களை அடித்துள்ள ரோஹித் சர்மா, கவாஸ்கருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். சேவாக்கே கூட ஒரு டெஸ்ட் தொடரில் 3 சதங்களை அடித்ததில்லை. 

அதேபோல ஒரு டெஸ்ட் தொடரில் அதிகமான சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் 15 சிக்ஸர்களை விளாசியதுதான் சாதனையாக இருந்தது. இந்த தொடரில் இதுவரை 17 சிக்ஸர்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, ஹெட்மயரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 13 சிக்ஸர்களை விளாசிய ரோஹித், இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை விளாசினார். 

click me!