இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் கும்ப்ளே இல்ல; அவருதான்! ஹர்பஜன் சிங்குடன் முரண்படும் கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Jun 25, 2020, 5:41 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் கபில் தேவ் தான் என்று சுனில் கவாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

இந்திய கிரிக்கெட் அணி, முதல் முறையாக 1983ல் உலக கோப்பையை வென்றது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, கிளைவ் லாயிட் தலைமையிலான வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலக கோப்பையை முதல் முறையாக தூக்கிய தினம் இன்றுதான்(ஜூன்25). 1983ம் ஆண்டு இதே தினத்தில் தான் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. 

உலக கோப்பையை வென்ற 37வது ஆண்டு தினத்தை ஒட்டி, அந்த உலக கோப்பை மற்றும் அதில் ஆடிய சக வீரர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை நினைவுகூர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் 1983 உலக கோப்பையில் ஆடியவரும், ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான கவாஸ்கர் இணையதளம் ஒன்றிற்கு பேசியுள்ளார். 

அப்போது, என்னை பொறுத்தமட்டில் இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த மேட்ச் வின்னர் என்றால் அது கபில் தேவ் தான். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பு செய்து அணிக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். எனவே அவர் தான் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கபில் தேவிற்கு பிறகு அவரை போன்று, பேட்டிங் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் என இரண்டிலுமே சம அளவில் அசத்தக்கூடிய ஒரு தரமான ஆல்ரவுண்டர் இன்று வரை இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இந்திய அணியில் கவாஸ்கருக்கு பிறகு சச்சின், சச்சினுக்கு பிறகு கோலி என பேட்டிங்கிலும், கும்ப்ளேவிற்கு பிறகு ஹர்பஜன் சிங், அவருக்கு பிறகு அஷ்வின் என ஸ்பின் பவுலிங்கிலும் ஸ்ரீநாத் - ஜாகீர் கானுக்கு அடுத்து பும்ரா ஃபாஸ்ட் பவுலிங்கிலும் என ஒவ்வொரு சிறந்த வீரரின் இடத்தையும் மற்றொரு வீரர் நிரப்பியுள்ளார். ஆனால் கபில் தேவின் இடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை. 

கபில் தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட் மற்றும் 225 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கபில் தேவ், 5,218 ரன்களை அடித்துள்ளார். அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பு செய்து முறையே, 3,783 ரன்களை விளாசியதுடன், 253 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.    

அண்மையில், அனில் கும்ப்ளே தான் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்த நிலையில், கவாஸ்கர், கபில் தேவ் தான் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என கருத்து தெரிவித்திருக்கிறார். 
 

click me!