அதை மட்டும் சரியா செய்திருந்தால் மொத்த கதையும் மாறியிருக்கும்..! கவாஸ்கர் ஆதங்கம்

By karthikeyan VFirst Published Aug 23, 2020, 3:35 PM IST
Highlights

இந்திய அணி நிலையான 4ம் வரிசை வீரருடன் உலக கோப்பையில் களமிறங்காதது தான் தோல்விக்கு காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

2019 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்டதில், இந்திய அணியும் ஒன்று. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்திய அணியும் மிகச்சிறப்பாக ஆடி லீக் சுற்றில் ஒரு போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் வென்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம், மிடில் ஆர்டர் சொதப்பல் தான். லீக் சுற்றில் சிறப்பாக ஆடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதையடுத்து, மிடில் ஆர்டர் ஏற்கனவே பலவீனமாக இருந்ததால், இந்திய அணியால் இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை தழுவியது. இந்திய அணி டாப் ஆர்டர் பேட்டிங்கை மட்டுமே சார்ந்திருந்தது தான் தோல்விக்கு காரணம். 

உலக கோப்பைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே 4ம் வரிசை வீரரை தேர்வுக்குழுவும் இந்திய அணி நிர்வாகமும் தேடும் படலத்தை தொடங்கியது. ஆனாலும் அந்த வரிசைக்கு சரியான வீரரை தேர்வு செய்யாமலேயே உலக கோப்பைக்கு சென்றதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. 

உலக கோப்பையில் தோற்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த தோல்வியின் தாக்கம் முன்னாள், இந்நாள் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் உள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், இந்திய அணியின் டாப் 3 பேட்டிங் ஆர்டர்  அபாரமானது. அதனால் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே களத்திற்கு வந்து நீண்ட நேரம் நின்று பெரிய இன்னிங்ஸை ஆடும் வாய்ப்பை உலக கோப்பையில் 4 மற்றும் 5ம் வரிசை பேட்ஸ்மேன்கள் பெறவில்லை. மிடில் ஆர்டரில் சரியான 4ம் வரிசை வீரரை உலக கோப்பைக்கு அழைத்து செல்லாதது பெரிய தவறு. ஒருவேளை சரியான வீரரை தேர்வு செய்து அழைத்து சென்றிருந்தால் உலக கோப்பையில் கதையே மாறியிருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!