தனிமைப்படுறீங்களா..? இல்ல ஜெயிலுக்கு போறீங்களா..? கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கம்பீர் கடும் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Mar 24, 2020, 9:44 AM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தலும் பாதிப்பும் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகிவரும் நிலையில், வீட்டில் தனிமைப்படாமல் வெளியே சுற்றுபவர்களை பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். 
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அனைத்து நாடுகளும் கொரோனாவிலிருந்து மீள போராடிவருகின்றன. இந்தியாவில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், சமூகப்பரவல் தடுக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் தினம் தினம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 9 பேர் கொரோனாவிற்கு பலியாகியிருப்பதாகவும் 37 பேர் குணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு, ஊரடங்கு என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

உணவு பொருட்கள், மருந்துகள் கிடைக்க ஏதுவாக அவை தொடர்பான கடைகள் செயல்பட தடையில்லை. இப்படியாக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டபோதிலும், சிலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமலும், அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அலட்சியமாகவும் இருந்து, பொதுவெளியில் சுற்றி திரிகின்றனர். 

அரசின் உத்தரவை மீறி, தனிமைப்படுத்தி கொள்ள தவறுபவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதியின் எம்பியுமான கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டுவீட் செய்துள்ள கம்பீர், தனிமைப்படுறீங்களா அல்லது ஜெயிலுக்கு போறீங்களா..? தனிமைப்பட தவறி, இந்த சமூகத்துக்கே அச்சுறுத்தலாக திகழாமல், வீட்டிலேயே இருங்கள். நாம் எதிர்த்து போரிட்டு கொண்டிருப்பது பணிகளையோ அல்லது தொழில்களையோ அல்ல.. வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து தனிமைப்படுங்கள். அத்திவாசிய சேவையில் ஈடுபட்டுள்ளோரை தவிர அனைவருமே தனிமைப்படுங்கள்.. ஜெய்ஹிந்த் என்று கம்பீர் பதிவிட்டுள்ளார். 
 

click me!