விராட் கோலி தலைமையிலான இந்திய அணியால் நாக்அவுட் போட்டிகளில் ஜெயிக்க முடியாதது ஏன்? கண்டுபிடித்து சொன்ன கம்பீர்

By karthikeyan VFirst Published Jun 13, 2020, 8:00 PM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியால், ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் ஜெயிக்க முடியாததற்கான காரணத்தை கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 2014ம் ஆண்டு பொறுப்பேற்ற விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக 2017ம் ஆண்டு பொறுப்பேற்றார். விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றிகளை குவித்துவருகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிகமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து, பெரும்பாலான ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. 

ஆனால் ஐசிசி தொடர் எதையும் வென்றதில்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில், அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 2013ல் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்னர், இதுவரை ஒரு ஐசிசி தொடரைக்கூட இந்திய அணி வெல்லவில்லை. 

இந்நிலையில், இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் தோற்பதற்கான காரணத்தை கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கவுதம் கம்பீர், சிறந்த வீரருக்கும் மிகச்சிறந்த வீரருக்கும் இடையேயான வித்தியாசமே, முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் அழுத்தத்தை கையாண்டு சிறப்பாக ஆடுவதுதான். தற்போதைய இந்திய அணி வீரர்கள், நெருக்கடியை சரியாக கையாள்வதில்லை என நினைக்கிறேன்.

ஐசிசி தொடர்களின் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெறும் இந்திய அணி, நாக் அவுட் போட்டிகளான அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் சரியாக ஆடுவதில்லை. நாக் அவுட் போட்டிகளில் நெருக்கடியை சமாளிக்க மனவலிமை முக்கியம். உலக சாம்பியன்ஷிப் வெல்ல தகுதியான அணி தான் இந்திய அணி. ஆனால் களத்தில் அதை நிரூபித்து வெற்றி பெறாத வரை, நாம் உலக சாம்பியன் கிடையாது.

லீக் போட்டிகள் மற்றும் இருதரப்பு, முத்தரப்பு போட்டிகளில் தவறிழைத்தாலும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் தவறிழைத்தால், மொத்தமும் முடிந்துவிடும். இந்த விஷயத்தில் தான் இந்திய அணி சிக்கிக்கொள்கிறது என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

click me!