
கௌதம் கம்பீர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். மன உறுதி உடையவர் கம்பீர்; களத்தில் ஆக்ரோஷமாகவே இருப்பார். அவரது பேட்டிங், அணுகுமுறை ஆகியவற்றில் ஆக்ரோஷமும் வெற்றி வேட்கையும் நிறைந்திருக்கும்.
இந்திய அணி தோனி தலைமையில் 2007 வென்ற டி20 உலக கோப்பை, 2011ல் வென்ற ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 உலக கோப்பை தொடர்களிலும் கௌதம் கம்பீரின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக அந்த 2 உலக கோப்பைகளின் ஃபைனல்களிலும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஐபிஎல்லிலும் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணிக்கு ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பான பங்களிப்பை செய்து 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர் கம்பீர். இப்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டுவருகிறார்.
லக்னோ அணி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும், சிஎஸ்கேவிற்கு எதிரான 2வது போட்டியில் 211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி 2 ஓவரில் லக்னோ அணிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. ஷிவம் துபே வீசிய முக்கியமான 19வது ஓவரில் எவின் லூயிஸும் ஆயுஷ் பதோனியும் இணைந்து 25 ரன்களை விளாசினர். கடைசி ஓவரில் 9 ரன்களை எளிதாக அடித்து லக்னோ அணி வெற்றி பெற்றது.
லக்னோ அணிக்கு ஆயுஷ் பதோனி வின்னிங் ஷாட்டை அடித்தவுடன், டக் அவுட்டில் இருந்த லக்னோ அணி ஆலோசகர் கம்பீர் எழுந்து நின்று வெறித்தனமாக கத்தி வெற்றியை கொண்டாடினார். கம்பீர் ஆடிய காலத்தில் இருந்த அவரது அந்த வெற்றி வேட்கையும் ஆக்ரோஷமும் இன்னும் குறையாததை கண்டு ரசிகர்கள் வியந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.