
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி ஆடுகிறது.
இந்த சீசனின் முதல் போட்டியில் கேகேஆரிடம் தோற்ற சிஎஸ்கே அணி, நேற்று லக்னோவிற்கு எதிராக ஆடிய 2வது போட்டியிலும் தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 210 ரன்களை குவித்தபோதிலும், அந்த இலக்கை லக்னோ அணி அடித்துவிட்டதால், 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி.
சிஎஸ்கே அணி லக்னோவிற்கு எதிரான போட்டியில் 3 மாற்றங்களுடன் களமிறங்கியது. டெவான் கான்வே, ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சாண்ட்னெர் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மொயின் அலி, ப்ரிட்டோரியஸ் மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர். முதல் போட்டியில் ஆடாத மொயின் அலி இந்த போட்டியில் ஆடியதால் டெவான் கான்வே நீக்கப்பட்டார்.
நியூசிலாந்தை சேர்ந்து இடது கை அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான டெவான் கான்வே நீக்கப்பட்டதால் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த சிஎஸ்கே அணி ரசிகர்கள், சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முடிவை கடுமையாக சாடினர். அடுத்த மைக் ஹசியாகவோ அல்லது டுப்ளெசிஸாகவோ வரக்கூடிய வீரர் என்று ஒருவர் டுவீட் செய்துள்ளார். வெறும் 3 வெளிநாட்டு வீரர்களுடன் ஆடும் சிஎஸ்கே அணி,டெவான் கான்வேவை எடுக்காததை ஒருவர் விமர்சித்துள்ளார். இதுமாதிரியாக பல ரசிகர்களும் பல விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். ஒரேயொரு போட்டியில் வாய்ப்பளித்துவிட்டு அடுத்த போட்டியிலேயே கான்வேவை பென்ச்சில் உட்காரவைத்தது அதிர்ச்சிகரமான, சோகமான முடிவுதான்.