IND vs NZ டெஸ்ட்: கம்பீர் தேர்வு செய்த இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்..! ரஹானே ஆடுறதுலாம் அவரோட அதிர்ஷ்டம்

By karthikeyan VFirst Published Nov 23, 2021, 3:27 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்துள்ள கௌதம் கம்பீர், அஜிங்க்யா ரஹானே இன்னும் இந்திய அணியில் ஆடுவது அவரது அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்டில் கேப்டன் விராட் கோலி ஆடவில்லை; 2வது போட்டியில் தான் கோலி ஆடுகிறார். அதனால் முதல் டெஸ்ட்டில் அஜிங்க்யா ரஹானே கேப்டன்சி செய்கிறார்.

இந்நிலையில், ரஹானே கேப்டனாக இருப்பதால் தான் இன்னும் இந்திய அணியில் அவரால் ஆடமுடிகிறது என்றும், இது அவரது அதிர்ஷ்டம் என்றும் கௌதம் கம்பீர் கூறியிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் தூண்களில் ஒருவராக திகழ்ந்துவந்த அஜிங்க்யா ரஹானே, அண்மைக்காலமாக படுமோசமாக சொதப்பிவருகிறார். ஆஸி., 2020-2021 சுற்றுப்பயணத்தில் ரஹானே கேப்டன்சியில் தான் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ஆனால் அந்த தொடரில் ரஹானே வெறும் 268 ரன்கள்  மட்டுமே அடித்தார். அதன்பின்னர் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 18.66 என்ற மோசமான சராசரியுடன் வெறும் 112 ரன்களை மட்டுமே அடித்தார் ரஹானே. அதன்பின்னர் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரிலும் படுமோசமாக சொதப்ப, இந்திய அணியில் அவரது இடம் குறித்த விவாதங்கள் எழுந்தன. ரஹானேவை நீக்கிவிட்டு அவரது இடத்தில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் வலுத்தன.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய கௌதம் கம்பீர், ரஹானே இன்னும் இந்திய அணியில் ஆடுவதெல்லாம் அவரது அதிர்ஷ்டம் என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், மயன்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும். 3ம் வரிசையில் புஜாரா இறங்குவார். 4ம் வரிசையில் ஷுப்மன் கில் ஆடலாம். 5 வரிசையில் ரஹானே. ரஹானே அணியை வழிநடத்துவதால் தான் இந்திய அணியில் இன்னும் ஆடுகிறார். இது அவரது அதிர்ஷ்டம். அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார் கம்பீர்.

ரஹானே இந்த தொடரிலும் சொதப்பும்பட்சத்தில் அணியில் அவரது இடம் சந்தேகம் தான். ஏனெனில் ஹனுமா விஹாரி இருக்கிறார். ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்களும் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். எனவே ரஹானே சொதப்பினால், அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
 

click me!