இங்கிலாந்திடம் தோற்றதற்கு இது இரண்டும்தான் காரணம்.. தாதா தடாலடி

By karthikeyan VFirst Published Jul 1, 2019, 5:01 PM IST
Highlights

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இரண்டு காரணங்களை கூறியுள்ளார்.

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

பர்மிங்காமில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டாகி வெளியேறியதால், அடுத்த விக்கெட்டையும் உடனே இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோஹித்தும் கோலியும் அந்த பணியை சரியாக செய்தனர். 

அதனால் முதல் 10 ஓவர்களில் அவர்களால் பெரிதாக அடித்து ஆடமுடியாத காரணத்தால் முதல் 10 ஓவர் முடிவில் இந்திய அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்த பின்னர் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 138 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்து கோலியும் சதமடித்து ரோஹித்தும் ஆட்டமிழந்த பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவைத்தான் அணி நம்பியிருந்தது. அவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். 

ஆனால் கடைசிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்காமல் அவுட்டாகிவிட்டனர். கடைசி ஓவர்களில் தோனி மிரட்டுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கடைசி 5 ஓவர்களில் தோனியும் கேதரும் இணைந்து வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த 5 ஓவர்களில் எந்த சூழலிலும் அடித்து ஆட முயலவே இல்லை. 

கடைசி 30 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் தேவை. அதை அடிப்பது கடினம் தான் என்றாலும் முயற்சி செய்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் முயலவே இல்லை என்பதுதான் பிரச்னை. இங்கிலாந்து பவுலர்கள் ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி அதிகமான ஸ்லோ டெலிவரிகளை வீசி கட்டுப்படுத்தினர். அவர்கள் எவ்வளவு கடினமாக வீசினாலும் பவுண்டரி அடிப்பதற்கான வழியை தேடி முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் வெற்றி பெறும் முனைப்பே இல்லாமல் இருவரும் ஆடினர். 

கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 39 ரன்கள் மட்டுமே அடித்தனர். இதையடுத்து 50 ஓவர் முடிவில் 306 ரன்களை மட்டுமே அடித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களாக இரண்டு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, முதல் 10 ஓவர்கள் மற்றும் கடைசி 5 ஓவர்களில் இந்திய வீரர்களின் ஆட்டம்தான் தோல்விக்கு காரணம். 338 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது பவர்பிளேவில் ரோஹித்தும் கோலியும் சேர்ந்து அடித்து ஆடியிருக்க வேண்டும். ஆனால் பவர்ப்ளேவில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இது மிக மிகக்குறைவு. அதேபோல கடைசி 5 ஓவர்களில் தோனியும் கேதரும் சிங்கிள் தட்டாமல் அடித்து ஆடியிருக்க வேண்டும். இது இரண்டும்தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என கங்குலி தெரிவித்துள்ளார். 
 

click me!