இதெல்லாம் ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பா..? இங்கிலாந்திடம் தோற்ற இந்திய அணியை தாறுமாறாக கிழித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Jul 1, 2019, 4:51 PM IST
Highlights

கடைசி ஓவர்களில் தோனி மிரட்டுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கடைசி 5 ஓவர்களில் தோனியும் கேதரும் இணைந்து வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட போட்டி. அரையிறுதிக்கு முன்னேறுவதில் நான்காவது இடத்தை பிடிக்க, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியதால், இந்திய அணியிடம் இங்கிலாந்து தோற்றால் பாகிஸ்தானுக்கான வாய்ப்பு இருந்தது. 

அதனால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டாகி வெளியேறியதால், அடுத்த விக்கெட்டையும் உடனே இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோஹித்தும் கோலியும் அந்த பணியை சரியாக செய்தனர். 

அதனால் முதல் 10 ஓவர்களில் அவர்களால் பெரிதாக அடித்து ஆடமுடியாத காரணத்தால் முதல் 10 ஓவர் முடிவில் இந்திய அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்த பின்னர் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 138 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்து கோலியும் சதமடித்து ரோஹித்தும் ஆட்டமிழந்த பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவைத்தான் அணி நம்பியிருந்தது. அவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். 

ஆனால் கடைசிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்காமல் அவுட்டாகிவிட்டனர். கடைசி ஓவர்களில் தோனி மிரட்டுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கடைசி 5 ஓவர்களில் தோனியும் கேதரும் இணைந்து வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த 5 ஓவர்களில் எந்த சூழலிலும் அடித்து ஆட முயலவே இல்லை. 

கடைசி 30 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் தேவை. அதை அடிப்பது கடினம் தான் என்றாலும் முயற்சி செய்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் முயலவே இல்லை என்பதுதான் பிரச்னை. இங்கிலாந்து பவுலர்கள் ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி அதிகமான ஸ்லோ டெலிவரிகளை வீசி கட்டுப்படுத்தினர். அவர்கள் எவ்வளவு கடினமாக வீசினாலும் பவுண்டரி அடிப்பதற்கான வழியை தேடி முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் வெற்றி பெறும் முனைப்பே இல்லாமல் இருவரும் ஆடினர். 

இது அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தோனி - கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங்கை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். 

இந்நிலையில், இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தால், அரையிறுதி வாய்ப்பை பெற்றிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ், இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், நீங்கள் செய்யும் செயலின் அடிப்படையில் தான் நீங்கள் யார் என்பது தீர்மானிக்கப்படும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஆனால் சில சாம்பியன்களின் ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள்(இந்திய அணி) படுமோசமாக தோற்றுப்போய்விட்டார்கள் என்று இந்திய அணியை சாடியுள்ளார் வக்கார் யூனிஸ்.

It's not who you are.. What you do in life defines who you are.. Me not bothered if Pakistan gets to the semis or not but one thing is for sure.. Sportsmanship of few Champions got tested and they failed badly

— Waqar Younis (@waqyounis99)
click me!