இந்திய அணியை வீழ்த்த முக்கியமான காரணம் அந்த ஒரு இங்கிலாந்து வீரர் தான்

By karthikeyan VFirst Published Jul 1, 2019, 4:45 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பர்மிங்காமில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்களை குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித், கோலி, ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. 

இந்த போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்துவதற்கு பேர்ஸ்டோவின் அதிரடியை காட்டிலும் முக்கியமான காரணம் என்றால் அது கிறிஸ் வோக்ஸ் தான். தொடக்கத்தில் இந்திய அணியின் அதிரடி வீரர்களான ரோஹித், ராகுலை அவ்வளவு எளிதாக ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினார். முதல் ஓவரையே மெய்டன் ஓவராக வீசினார். ராகுலை டக் அவுட்டாக்கி முதல் பிரேக் கொடுத்தார்.

அதன்பின்னர் சிறப்பாக ஆடி சதமடித்த ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி, தனது அடுத்த ஸ்பெல்லிலும் பிரேக் கொடுத்தார். பொதுவாக சதத்திற்கு பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய ரோஹித்தை சதமடித்த மாத்திரத்திலேயே 102 ரன்களில் வீழ்த்தினார். ரோஹித், பந்தை வேகமாக போட்டால் அடி நொறுக்கிவிடுவார். அவருக்கு ஸ்லோ டெலிவரி ஒன்றை போட்டு வீழ்த்தினார். 

ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகுதான் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையே வந்தது. அந்த நம்பிக்கையை கொடுத்தது வோக்ஸ் தான். அதன்பின்னர் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்தது இளம் வீரர் ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும். இவர்களில் ரிஷப் பண்ட்டின் கேட்ச்சை அபாரமாக பிடித்ததும் வோக்ஸ் தான். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப், ஃபைன் லெக் திசையில் அடிக்க, அது கொஞ்சம் மிஸ்ஸாகி சற்று ஸ்கெயராக சென்றது. அசாத்தியமான அந்த கேட்ச்சை, பவுண்டரி லைனில் ஓடிச்சென்று அபாரமாக பிடித்தார் வோக்ஸ். 

அதுமட்டுமல்லாமல் அவர் வீசிய 10 ஓவர்களில் 3 மெய்டன்கள். ராகுல், ரோஹித்தின் விக்கெட் மற்றும் ரிஷப் பண்ட்டின் கேட்ச் என பவுலிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே அவரது செயல்பாடுகள் தான் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி கொடுத்தது. 
 

click me!