கங்குலி பிறந்தநாள் ஸ்பெஷல்.. தாதாவின் வெறித்தனமான ரசிகர்கள் செய்த முரட்டு சம்பவத்தின் ஃப்ளாஷ்பேக்

Published : Jul 08, 2019, 05:29 PM IST
கங்குலி பிறந்தநாள் ஸ்பெஷல்.. தாதாவின் வெறித்தனமான ரசிகர்கள் செய்த முரட்டு சம்பவத்தின் ஃப்ளாஷ்பேக்

சுருக்கம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்ததினமான இன்று, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த அரிதினும் அரிதான சம்பவம் ஒன்றை பார்ப்போம்.   

இந்திய அணியின் முகத்தை மாற்றியவர் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. ரசிகர்களால் தாதா என்று பாசமாக அழைக்கப்படும் கங்குலியின் 47வது பிறந்தநாள் இன்று. கங்குலியின் பிறந்தநாளான இன்று, கங்குலியின் வெறித்தனமான ரசிகர்கள் செய்த ஒரு அரிய சம்பவம் குறித்து பார்ப்போம். 

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் சச்சின், கங்குலி, தோனி, கோலி என அந்தந்த காலக்கட்டத்தில் தலைசிறந்த வீரர்களாக இருந்தவர்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கின்றனர். என்னதான் சிறந்த வீரர்களாக இருந்தாலும் அவர்கள் ஆடும் காலம் வரையில்தான் அவர்களது தீவிர ரசிகர்களாக ரசிகர்கள் இருப்பர். 

ஆனால், கங்குலி ஒருவருக்குத்தான் அவர் ஓய்வு பெற்றபிறகும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்தளவிற்கு கங்குலியின் ரசிகர்கள் தீவிரமான ஆதரவாளர்கள். கொல்கத்தாவே கங்குலியின் கோட்டை எனும் அளவிற்கு அவரது சொந்த ஊரான கொல்கத்தாவில் அதிதீவிர ரசிகர்களை பெற்றிருக்கிறார் கங்குலி. 

சச்சினின் ரசிகர்களுக்கு சச்சினுக்கு அடுத்து கோலியையோ அல்லது மற்ற சில வீரர்களையோ பிடிக்கலாம். ஏனென்றால், அந்தந்த காலத்தில் சிறந்து விளங்கும் வீரர்களின் ரசிகர்களாக ரசிகர்கள் அப்டேட் ஆகிவிடுவர். ஆனால் கங்குலியின் ரசிகர்கள் அவர் ஓய்வு பெற்றபிறகும் கங்குலியின் ரசிகர்களே. 

அவ்வளவு தீவிரமான ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் கங்குலி. அது எந்தளவிற்கு தீவிரம் என்றால், கங்குலி இந்திய அணியில் ஆடவில்லை என்றால், எதிரணிக்கு ஆதரவளித்து அந்த அணியை வெற்றி பெறச்செய்யும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்களை பெற்றவர் கங்குலி. அப்படியொரு சம்பவம் 2005ம் ஆண்டு நடந்தது. அதுகுறித்து பார்ப்போம். 

இந்திய அணி சூதாட்ட புகாரால் சின்னா பின்னமாகியிருந்த சமயத்தில் 2000ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று அணியை வளர்த்தெடுத்தவர் அப்போதைய கேப்டன் கங்குலி. அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட்டுடன் இணைந்து இளம் வீரர்களை ஊக்குவித்து அணியை வளர்த்தெடுத்தார் கங்குலி. ஆனால் அதன்பிறகு பயிற்சியாளராக வந்த கிரேக் சாப்பலுக்கும் கங்குலிக்கும் ஒத்துவரவில்லை. இருவருக்கும் இடையே மோதல்போக்கே இருந்துவந்தது.

அப்படியான சமயத்தில் 2005ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இந்த தொடரிலிருந்து கங்குலி ஓரங்கட்டப்பட்டார். இந்த தொடரின் 4வது ஒருநாள் போட்டி கங்குலியின் சொந்த ஊரான கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. அந்த தொடருக்கு டிராவிட் கேப்டனாக செயல்பட்டார். தங்களது ஆஸ்தான நாயகனான கங்குலி இல்லாத இந்திய அணியை கண்டு உச்சகட்ட கோபமடைந்த கொல்கத்தா ரசிகர்கள், இந்திய அணிக்கு பாடம் புகட்ட நினைத்தனர்.

அதன் விளைவாக ஒட்டுமொத்த ஈடன் கார்டன் மைதானமும் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆதரவளித்தது. டிராவிட்டை ஏசினர், கிண்டல் செய்தனர். “நோ சவுரவ் நோ கிரிக்கெட்” என முழங்கினர். தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரவாரமாக ஆதரவளித்தனர். சொந்த நாட்டில் இப்படியொரு எதிர்ப்பை கண்டு துவண்டுபோன வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதன் விளைவாக 188 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இந்த இலக்கை எளிமையாக எட்டிய தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வு. இந்திய கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்தியாவிற்கு எதிராக, தென்னாப்பிரிக்காவிற்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்தனர் ரசிகர்கள். ஒற்றை காரணம் தாதா இல்லாதது தான். இவ்வாறு வெறித்தனமான ரசிகர்களை கொண்டவர் கங்குலி. இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் அழிக்கமுடியாத மறக்க முடியாத சம்பவம். 
 

PREV
click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு