இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் கர்நாடகாவில் ரூ.1400 கோடி செலவில் குளிர்பான தொழிற்சாலை அமைக்க இருக்கிறார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி பல சாதனைகளை படைத்தவர் முத்தையா முரளிதரன். 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். இதே போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முரளிதரன், பிஸினஸில் பிஸியாக இருக்கிறார். இலங்கையில் சொந்தமாக குளிர்பானங்கள் மற்றும் திண்பண்ட நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இதனை தற்போது இந்தியாவிலும் விரிவுபடுத்த முன்வந்துள்ளார். அதற்காக அவர் தேர்வு செய்துள்ள மாநிலம் தான் கர்நாடகா.
அங்கு, சாம்ராஜ் நகரை தேர்வு செய்திருக்கிறார். இது தொடர்பான கர்நாடகா மாநில தொழில்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது குளிர்பான தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சாம்ராஜ் நகரில் 45 ஏக்கரில் ரூ.1400 கோடி செலவில் உருவாகும் புதிய தொழிற்சாலையில் குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட உள்ளது.
முத்தையா முரளிதரனின் இந்த முதலீடு குறித்து கர்நாடகா மாநில தொழில்துறை அமைச்சர் பாட்டீல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கான அனைத்து சலுகைகளையும் கர்நாடகா அரசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு முதல் இந்த தொழிற்சாலை இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.