2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டும் போதும் என்று நினைத்தால் குல்தீப் யாதவ்வை 4ஆவது ஸ்பின்னராக அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்த இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், 25 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜாவிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதே போன்று கேஎல் ராகுக்கும் வலது காலின் தசை நார் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் விலகியுள்ளனர். ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் ஜடேஜா மற்றும் ராகுல் இருவரும் விலகியுள்ளனர். இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Ravindra Jadeja Injury: சீரியசாக பாதிக்கப்பட்ட ஜடேஜா – எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது டவுட் தான்!
இவர்களுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான், சௌரவ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தனது கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விசாகப்பட்டினத்தில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டும் களமிறங்க எண்ணினால், ஸ்பின்னர்களில் குல்தீப் யாதவ்வை இடம் பெறச் செய்யலாம்.
இந்திய அணிக்கு 4ஆவது சுழற்பந்து வீச்சாளர் தேவையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர் விளையாட்டு பல மாறுபாடுகளைக் கொண்டு வரக் கூடியவர். இங்கிலாந்து எப்படி ஹைதராபாத்தில் செய்ததோ அதே போன்று உத்திகளை கடைபிடிக்கலாம். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். வேகம், வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
குல்தீப் யாதவ் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்து வீச்சாக 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 3 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தைப் போன்று இந்திய அணி 4ஆவது ஸ்பின்னராக குல்தீப் யாதவ்வை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.