தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்க துடித்த கூட்டம்.. பிசிசிஐ தலைவர் அதிகாரத்தை வைத்து காப்பாற்றிய ஸ்ரீநிவாசன்

By karthikeyan VFirst Published Aug 17, 2020, 7:46 PM IST
Highlights

தோனியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கவிடாமல் 2011ம் ஆண்டு காப்பாற்றியதாக பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் என்.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். 
 

சர்வதேச கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. இந்திய அணியில் தோனி ஆடிய 15 ஆண்டுகள் 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்துள்ளார். இந்திய அணிக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. கடந்த ஓராண்டாக இந்திய அணியில் ஆடாமல் இருந்த தோனி, கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

தோனியின் கெரியரில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர்களில் பிசிசிஐ முன்னாள் தலைவரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான என்.ஸ்ரீநிவாசன் முக்கியமானவர். அந்தவகையில், 2011 உலக கோப்பைக்கு பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர் தோல்விகளின் விளைவாக, அப்போதைய தேர்வாளர்களில் சிலர் தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிப்பதில் குறியாக இருந்துள்ளனர். 

அப்படி தோனிக்கு எதிராக இருந்தவர்களை சமாளித்து, தனது பிசிசிஐ தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தோனியை கேப்டனாக நீடிக்கவைத்ததாக அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த என்.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார்.

2011ல் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர். அந்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த மோஹிந்தர் அமர்நாத் கேப்டன் தோனியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். தோனிக்கு மாற்று யார் என்பது குறித்த தெளிவான பார்வை இல்லாதபோதிலும் தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்குவதில் மட்டும் சிலர் குறியாக இருந்திருக்கின்றனர் சிலர். ஆனால் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், தோனிக்கு எதிராக இல்லை. 

இந்நிலையில், அணி தேர்வுக்குழு மீட்டிங்கில் தோனியை கேப்டனாக தேர்வு செய்யமுடியாது என சிலர் முரண்டுபிடிப்பதாக, கால்ஃப் ஆடிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாசனுக்கு, அப்போதைய பிசிசிஐ செயலாளரான சஞ்சய் ஜக்தாலே தகவல் கொடுத்துள்ளார். இதைக்கேட்டதும், மீட்டிங்கிற்கு சென்ற ஸ்ரீநிவாசன், அண்மையில் உலக கோப்பையை வென்ற ஒரு கேப்டனை எப்படி கேப்டன்சியிலிருந்து நீக்கமுடியும் என்று கேள்வியெழுப்பியதுடன், தோனி தான் கேப்டனாக நீடிப்பார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

அப்போதைய பிசிசிஐ விதிப்படி, தேர்வுக்குழு தேர்வு செய்யும் அணிக்கு பிசிசிஐ தலைவர் அனுமதி கொடுப்பது கட்டாயமாக இருந்தது. அதனால் பிசிசிஐ தலைவரான என்.ஸ்ரீநிவாசனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. 
 

click me!