ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு அறிவித்தது ஏன்..? ரெய்னா விளக்கம்

By karthikeyan VFirst Published Aug 17, 2020, 4:58 PM IST
Highlights

ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஓய்வு அறிவித்தது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விளக்கமளித்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் அவரது நெருங்கிய நண்பரும் தோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரெய்னாவும் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர். கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிக்க, அடுத்த சில நிமிடங்களில் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். 

தோனி, ரெய்னா ஆகிய இருவருமே ஐபிஎல்லில் சிஎஸ்கே தடை பெற்றிருந்த 2 சீசன்களை தவிர, மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியில் தான் ஆடிவருகின்றனர். தோனி, ரெய்னா ஆகிய இருவருமே சென்னையின் செல்லப்பிள்ளைகள். சிஎஸ்கே அணிக்கு 3 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று கொடுத்த கேப்டன் தோனியை தல என செல்லமாகவும் மரியாதையாகவும் அழைக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள், ரெய்னாவை சின்ன தல என அன்புடன் அழைக்கின்றனர். இருவருக்குமே பிறந்த சொந்த மண் வேறாக இருந்தாலும், சென்னையும் அவர்களது தாய்வீடு போன்றதே. இதை அவர்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், தாங்கள் பெரிதும் மதிக்கும் மற்றும் நேசிக்கும் சென்னை மண்ணிலேயே தங்களது ஓய்வு அறிவிப்பையும் வெளியிட்டனர். தோனி மிகுந்த நாட்டுப்பற்று கொண்டவர். ராணுவத்தின் மீது பேரார்வம் கொண்டவர். இதை நாம் பலமுறை பார்த்து அறிந்திருக்கிறோம். அந்தவகையில், நாட்டுப்பற்று காரணமாக அதை மற்றுமொருமுறை பறைசாற்றும் வகையில் தோனி, ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஓய்வறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அவரது ஓய்வு அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதால் அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் ரெய்னாவின் ஓய்வு அறிவிப்புதான் பேரதிர்ச்சி. 

இந்நிலையில், தோனியின் வழியில் ஓய்வறித்த ரெய்னா, இருவரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஓய்வை அறிவித்தது ஏன் என விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ரெய்னா, சென்னை வந்ததும் தோனி ஓய்வறிக்க வாய்ப்புள்ளது என்பது எனக்கு தெரியும். தோனி ஓய்வறிவித்த பின்னர், கட்டிப்பிடித்து நிறைய அழுதோம். நான், பியூஷ் சாவ்லா, ராயுடு, கேதர் ஜாதவ், கரன் ஷர்மா ஆகியோர் ஒன்றாக இணைந்து கெரியர் குறித்தும் உறவு குறித்தும் நிறைய பேசினோம். நைட் பார்ட்டி செய்தோம்.

தோனியின் ஜெர்சி எண் 7; எனது ஜெர்சி எண் 3 - இரண்டையும் சேர்த்தால் 73. ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவு. எனவே ஓய்வறிவிக்க இதைவிட சிறந்த தினம் இருக்கமுடியாது என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.
 

click me!