நான் பந்தயம் கட்டுறேன்.. தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் முறியடிக்கவே முடியாது..! கம்பீர் புகழாரம்

By karthikeyan VFirst Published Aug 17, 2020, 6:00 PM IST
Highlights

தோனியின் ஒரு சாதனையை மட்டும் யாராலும் முறியடிக்கவே முடியாது என்று மிக உறுதியாக நம்பும் கம்பீர், பந்தயம் கூட கட்டுகிறேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

தோனி இந்திய அணிக்காக 2014லிருந்து 2019ம் ஆண்டுவரை 15 ஆண்டுகள் ஆடி, பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்து வகையிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி இந்திய அணிக்கு ஏராளமான வெற்றிகளையும் கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். 

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் கேப்டனாக இருந்து வென்று கொடுத்தவர் தோனி. 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்குரியவர். 

அதிகமான ஸ்டம்பிங், அதிகமான நாட் அவுட் என தோனி விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் எத்தனையோ சாதனைகள் செய்திருந்தாலும், அவரது தகர்க்கமுடியாத சாதனையென்றால், அது 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற சாதனைதான். இனிமே யாராலும் தோனியின் இந்த சாதனையை முறியடிக்க முடியாது என்பதை உறுதியாக நம்பும் கம்பீர், பந்தயம் கட்டவே தயார் என்று கூறியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தோனி குறித்து பேசிய கம்பீர், தோனி இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். இதுதான் என்றைக்கும் யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக நிலைத்து நிற்க போகிறது. தோனியின் இந்த சாதனையை பற்றி எப்போதுமே பேசலாம். இந்த சாதனையை யாராலும் முறியடிக்கவே முடியாது. இதை யாரும் முறியடிக்க முடியும் என்றுகூட நான் நினைக்கவில்லை. யாராலும் முறியடிக்க முடியாது என்று உறுதியாக சொல்கிறேன். 

அதிகமான ரன்கள், அதிகமான சதங்கள், அதிக விக்கெட்டுகள், அதிக கேட்ச்கள் என அனைத்து சாதனைகளுமே முறியடிக்கப்படலாம். ரோஹித் சர்மாவின் இரட்டை சத சாதனை கூட முறியடிக்கப்படலாம். ஆனால் 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற சாதனையை தோனி மட்டும் தான் படைத்துள்ளார். அதை இனிமேல் யாராலும் முறியடிக்கவே முடியாது. நான் பந்தயம் வேண்டுமானால் கட்டுகிறேன் என்று கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

click me!