4ம் நாள் ஆட்டம் முழுவதும் நின்று விளையாடிய மழை! விறுவிறுப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட்; வழிவிடுவாரா வருணபகவான்?

By karthikeyan VFirst Published Jul 27, 2020, 10:09 PM IST
Highlights

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. 
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்தது. முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட், ஓல்ட் டிராஃபோர்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியோ வெறும் 197 ரன்களுக்கு சுருண்டது. எனவே முதல் இன்னிங்ஸ் முடிவில் 172 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. 

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் டாப் 3 வீரர்களுமே அரைசதம் அடித்தனர். தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் மற்றும் சிப்ளி ஆகிய இருவரும் அரைசதம் அடித்த நிலையில், சிப்ளி 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட்டும் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். சதத்தை நோக்கி ஆடிய ரோரி பர்ன்ஸ் 90 ரன்களில் ஆட்டமிழக்க, 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் அடித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. 

மொத்தமாக 398 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு 399 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. 399 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் அடித்திருந்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் இருந்தது இங்கிலாந்து. கடினமான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தது மட்டுமல்லாது, 2 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தியதால் இங்கிலாந்தின் கை ஆட்டத்தில் ஓங்கியிருந்தது. எனவே இன்று வெற்றி பெற்றுவிடலாம் என இங்கிலாந்து நினைத்தது. ஆனால் நான்காம் நாளான இன்றைய ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இன்று முழுவதும் மழை நிற்காததால் 4ம் நாள் முழுவதும் பாதிக்கப்பட்டது. 

எனவே நாளை கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.  அதற்கு வருணபகவானும் வழிவிட வேண்டும். 
 

click me!