கடந்த 26 ஆண்டுகளாக எந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரும் செய்யாத சாதனையை செய்த கீமார் ரோச்..!

By karthikeyan VFirst Published Jul 27, 2020, 7:58 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் கீமார் ரோச் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மைல்கல்லை எட்டி தரமான சம்பவம் செய்துள்ளார். 
 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கீமார் ரோச் புதிய மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது. 

எனவே தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இரு அணிகளுமே வெற்றி கட்டாயத்துடன் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை குவித்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 197 ரன்களுக்கே சுருண்டது.  172 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. மொத்தம் 398 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 399 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இன்றைய ஆட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டாலும் நாளைய ஆட்டத்தில் எஞ்சிய 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெறுவது உறுதி.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் கீமார் ரோச், டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தான், ரோச்சின் 200வது விக்கெட். 

இதன்மூலம் 26 ஆண்டுகளுக்கு பிறகு, 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை கடந்த பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் ரோச். ஆம்.. குர்ட்லி ஆம்ப்ரூஸ், 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை 1994ம் ஆண்டு எட்டினார். அதன்பின்னர் இந்த 26 ஆண்டுகளில் எந்த வெஸ்ட் இண்டீஸ் பவுலரும் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் குர்ட்னி வால்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 519 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 

ஆம்ப்ரூஸ், வால்ஷ் போன்ற மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் 26 ஆண்டுகளாக ஒரு பவுலர் கூட 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை கூட எட்டாதது வருத்தமானதுதான். அந்தவகையில், இன்னும் தாமதமாகாமல் வெஸ்ட் இண்டீஸின் மானத்தை காத்துள்ளார் ரோச்.
 

click me!